திருமணமான பெண்ணுடன் ஒருமித்த சம்மதத்துடன் பாலியல் உறவு கொண்டு அவரை திருமணம் செய்ய மறுத்தால் அது பாலியல் வன்கொடுமையாகக் கருதப்படாது என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.


கேரள மாநிலம் கொல்லத்தைச் சேர்ந்த நபர் மீது பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் கொடுத்திருந்தார். ஏற்கெனவே திருமணமான அந்தப் பெண் விவாகரத்துக்கு விண்ணப்பித்துள்ளார். அந்தப் பெண்ணின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில், அந்தப் பெண் தன் ஆண் நண்பர் மீது பாலியல் பலாத்கார புகார் கூறினார். சம்பந்தப்பட்ட நபர் ஆஸ்திரேலியாவிலும் இந்தியாவிலும் தன்னுடன் நிறைய முறை உறவு கொண்டதாகவும். அப்போதெல்லாம் தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறியதாகவும், அதனாலேயே தான் உறவுக்கு சம்மதித்தாகவும் கூறியிருந்தார். ஆனால் அவரது மனு விவரமே அவருக்கு எதிராக அமைந்துவிட்டது. 


இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், அவருடைய புகார் மனுவின்படி இருவரும் மனம் ஒத்தே பாலுறவு கொண்டதாகத் தெரிகிறது. அதன்படி இது இந்திய தண்டனைச் சட்டம் 376ன் பலாத்கார குற்றமாகாது. ஒரு ஆணும் திருமணமான பெண்ணும் மனம் ஒத்து பாலுறவு கொண்ட நிலையில் அந்த ஆண் திருமணம் செய்து கொள்ளும் வாக்குறுதியை மீறினால் அது குற்றமாகாது. ஒருவேளை அந்த நபர் திருமணமாகாத பெண்ணுடன் உறவு கொண்டு அவரை ஏமாற்றும் மனப்பாங்கில் அதை நிறைவேற்றியிருந்தால் அது வழக்காகும் என்று தெரிவித்துள்ளது.
நீதிபதி கவுசர் ஏடப்பாகத் கூறுகையில், இந்த வழக்கில் மனுதாரர் திருமணமானவர். அவர் விரும்பியே அந்த நபருடன் உறவு கொண்டுள்ளார். அதுவும் சட்டப்பூர்வமான திருமண பந்தத்தில் இணைய இப்போதைக்கு வாய்ப்பிலை ஏனெனில் விவாகரத்து வழக்கு நிலுவையில் இருக்கிறது என்று தெரிந்தே தான் உறவில் ஈடுபட்டுள்ளார். அதனால் இந்த வழக்கு தள்ளுபடியாகிறது என்றார்.


வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம். சட்டப்பிரிவு 376 இங்கே செல்லுபடியாகாது. அதேபோல் சட்டப்பிரிவு 417, 493ம் இந்த வழக்கிற்கு பொருந்தாது. இந்த வழக்கில் மனுதாரர் ஏமாற்றப்படவில்லை. சட்டப்பூர்வ திருமணத்திற்கான வாக்குறுதியை அளித்துவிட்டு அதை குற்றஞ்சாட்டப்பட்ட நபர் மீறவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 
துணை தேர்வில் தேவை கவனம்


ஆண், பெண் உறவு இயல்பானதே. இருவருக்குமே ஒரு துணை தேவைப்படுவதும் இயல்பானதே. ஆனால் அந்த உறவு நம்பிக்கையின் அடிப்படையில், அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டும். அன்பும், நம்பிக்கையும் தான் எந்த ஒரு உறவுக்கும் வலு சேர்க்க முடியும். மற்றபடி ஏதோ எதிர்பார்ப்புடன் அமையும் எந்த ஒரு உறவும் சிக்கலை சந்திக்கும். மணமுறிவுக்குப் பின் பெண்கள் கட்டாயமாக இன்னொரு ஆண் துணையை தேடிக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. தேடிக் கொண்டாலும் எந்தத் தவறும் இல்லை. அது நமக்குக் கிடைக்கும் நபரின் தன்மை பொறுத்து அமைய வேண்டும். நம்மை பாலியல் ரீதியாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ மட்டும் பயன்படுத்திக் கொள்ள நினைக்கும் ஆணோ, பெண்ணோ நம்மை உரியும் அட்டைப் பூச்சியாகத் தான் இருக்க வேண்டும். அத்தகைய நிலையில் தனியாக வாழ்வதே நிம்மதி. துணை தேர்வில் யாராக இருந்தாலும் கவனம் தேவை.