பூம் பூம் மாட்டின் தலையில் போன் பே அட்டை ஒட்டி அதன் மூலம் இரவல் பெறும் மாட்டுக்காரரின் வீடியோவைப் பகிர்ந்துள்ள நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது தான் டிஜிட்டல் இந்தியாவின் புரட்சி என நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வீடியோவை அவர் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ குறித்து அமைச்சர் நிர்மலா சீதாராமன், இதுதான் டிஜிட்டல் பேமென்ட்டின் புரட்சி. கங்கிரெட்டுலுவாலு, எருதை அலங்காரப்படுத்தி வீடு தோறும் சென்று நாதஸ்வரம் வாசித்து யாசகம் பெறுவர். விளைநிலங்களில் பயன்படுத்தத் தகுதியற்ற எருதுகள் இவ்வாறு பயன்படுத்தப்படும். இது ஆந்திரா, தெலங்கானாவில் பயன்பாட்டில் உள்ளது. அப்படியொரு கங்கிரெட்டுலுவாலு, க்யூஆர் கோட் கொண்ட அட்டை மூலம் யாசகம் பெறுகிறார் என்று பதிவிட்டுள்ளார்.
கங்கிரெட்டு சமூகம் ஆந்திராவின் பழங்குடியின சமூகம். இவர்கள் பரம்பரை பரம்பரையாக எருதுகளை வைத்து வீடுகளில் நாதஸ்வரம் வாசித்து யாசகம் பெறுவது. பண்டிகை காலங்களில் தெருக்களில் பாட்டு, நடனம் என்று கூத்து கட்டுவதையே தொழிலாக செய்கின்றனர். இச்சமூகம் கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கிய சமூகமாகக் கருதப்படுகிறது. இந்நிலையில் இச்சமூகத்தினர் பூம் பூம் மாட்டின் தலையில் போன் பே அட்டை ஒட்டி அதன் மூலம் இரவல் பெறும் காட்சி வைரலாகியுள்ளது.அதனை பெருமித நிகழ்வாக நிர்மலா சீதாராமனும் பகிர்ந்துள்ளார்.
இந்தியாவும் டிஜிட்டல் இந்தியாவும்:
கடந்த 2014 மே மாதம் பாஜக இந்தியாவில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது. மோடி பிரதமராக பதவியேற்ற ஒராண்டுக்கு பிறகு 2015 ஜூலை முதல் தேதி 'டிஜிட்டல் இந்தியா' திட்டத்தை அறிவித்தார். இந்தியாவை டிஜிட்டல் ஆற்றல் மிக்க தேசமாகவும், இந்திய சமூகத்தை அறிவுசார் சமூகமாகவும் உருவாக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் அறிவிக்கப்பட்டது.
இணைய வசதி, திறன் வளர்ச்சி, டிஜிட்டல் நிர்வாகம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து வழங்கக் கூடிய திட்டமாக 'டிஜிட்டல் இந்தியா' முன்வைக்கப்பட்டது. ஏழைகளுக்குமான 'டிஜிட்டல் இந்தியா'வை உருவாக்குவதே நோக்கம் என பிரதமர் மோடி இத்திட்டம் பற்றி குறிப்பிட்டிருந்தார். கடந்த 2016-ம் ஆண்டு, நவம்பர் மாதம் 8-ம் தேதி இரவு தொலைக்காட்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் இனி செல்லாது. உங்களிடம் இருக்கும் அந்த நோட்டுகளை டிசம்பர் 31-ம் தேதிக்குள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக்கொள்ளுங்கள். இந்தியாவை கறுப்புப்பணம் இல்லாத நாடாக மாற்றுவோம்" என்றார்.
அதன்பின்னர் நாடு முழுவதும் பணத் தட்டுப்பாடு அதிகரித்தபோது டிஜிட்டல் பேமென்ட், ஆன்லைன் பணப்பரிவர்த்தனை ஊக்குவிக்கப்பட்டது. படித்த இணைய வசதி உள்ள மக்கள் இதன் மூலம் நன்மையும் அடைந்தனர். அதன் பின்னர் அதை சுட்டிக்காட்டியே டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையை பாஜக ஊக்குவித்தது. இப்போது சாமான்யர்களும் கூகுள் பே, ஃபோன் பே, ஆன்லைன் பேங்கிங் செயலிகள் எனப் பயன்படுத்துவது அதிகரித்துள்ளது.