ரம்ஜான் பண்டிகையையோட்டி நாடு முழுவதும் இஸ்லாமியர்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.


ரம்ஜான் திருநாள்:


இஸ்லாமிய மக்களின் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று ரம்ஜான். ஈகைத் திருநாளாக கொண்டாடப்படும் ரம்ஜான் பண்டிகை இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. ரமலான் நோன்பு கடைபிடிப்பது இஸ்லாமியர்களின் ஐந்து கோட்பாடுகளில் ஒன்றாகும்.


சிறப்பு நோன்பு:


ரமலான் மாதம் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு நோற்ற பிறகு உலகம் முழுவதும் வாழும் இஸ்லாமியர்களால் கொண்டாடப்படுகிறது. இந்த நோன்பு காலத்தில் காலையில் சூரிய உதயத்திற்கு பிறகு சூரியன் மறைவு வரை உணவு ஏதும் உண்ணாமல் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பர். அதன் முடிவில் ஈகைத் திருநாள் என்று தமிழ் மக்களால் அழைக்கப்படும் ரமலான் நாளில் ஏழை மக்களுக்கு அரசி அல்லது கோதுமை போன்ற பொருட்களை இஸ்லாமியர்கள் வழங்க வேண்டும்.


தமிழகத்தில் சிறப்பு தொழுகை:


ரம்ஜான் பண்டிகையையொட்டி  மதுரை தமுக்கம் மைதானத்தில் ஜாக் அமைப்பு சார்பில் சிறப்பு தொழுகை நடைபெறது. இதேபோன்று, சென்னை, நாகூர் தர்கா உள்ளிட்ட தமிழ்நாட்டின் பிற நகரங்களில் உள்ள மசூதிகளிலும் பொதுமக்கள் அதிகாலையிலேயே சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். இதற்காக அதிகாலையிலேயே எழுந்து குளித்து புத்தாடை அணிந்து தொழுகையில் ஈடுபட்ட பின்பு, ஒருவரை ஒருவர் ஆரத்தழுவி அன்பையும் வாழ்த்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.






நாடு முழுவதும் சிறப்பு தொழுகை:


தமிழகம் மட்டுமின்றி நாடு முழுவதிலும் உள்ள பல்வேறு மசூதிகளிலும் இஸ்லாமியர்கள் அதிகாலையிலேயே குவிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர். குறிப்பாக, டெல்லி ஜாமா மஸ்ஜித் மசூதியில் ஆயிரக்கணக்கானோர் குவிந்து வாழ்வில் நலம் பெறவும், உலக நன்மைக்காகவும் பிரார்த்தனை செய்தனர். இதேபோன்று மும்பையில் உள்ள மஹிம் தர்காவில் தொழுகையில் ஈடுபட்டனர்.


தலைவர்கள் வாழ்த்து:


நாடு முழுவதும் ரமலான் பண்டிகையையொட்டி குடியரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி , தமிழ்நாடு ஆளுநர் ரவி,  முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி என அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.