அயோத்தி ராமர் கோயிலில் குழந்தை ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்து வைத்தார். ராமர் கோயிலின் தலைமை அர்ச்சகர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ், உத்தர பிரதேச ஆளுநர் ஆனந்திபென் படேல், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத் உள்ளிட்டோர் முன்னிலையில் கருவறையில் ராமர் சிலையை பிரதமர் மோடி பிராண பிரதிஷ்டை செய்தார்.


பிராண பிரதிஷ்டை செய்யப்பட்ட குழந்தை ராமர் சிலை:


மலர்களாலும் விலை மதிப்பற்ற உபகரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட ராமர் சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டதை உலகம் முழுவதும் உள்ள ரசிகர்கள் நேரலையில் கண்டு களித்தனர்.


ஷியாமல் (கருப்பு நிறம்) கல்லில் வடிவமைக்கப்பட்ட ஐந்து வயது குழந்தை ராமர், தாமரையின் மீது நிற்பது போன்று சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. தாமரை மற்றும் ஒளிவட்டம் இருப்பதுபோல் செதுக்கப்பட்டுள்ள இந்த சிலையின் எடை 150 கிலோ எனக் கூறப்படுகிறது. சிலையின் மொத்த உயரம் ஏழு அடி என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 


கோயிலின் தரை தளத்தில் குழந்தை ராமர் சிலை வைக்கப்பட்டுள்ளது. கோயிலின் முதல் தளம் இன்னும் கட்டப்படவில்லை. முதல் தளம் கட்டப்பட்ட பிறகு, ராமர், சீதை, லட்சுமணன் மற்றும் அனுமன் ஆகியோரின் சிலை அங்கு வைக்கப்பட உள்ளது.


திறப்பு விழாவில் பங்கேற்ற பிரபலங்கள்:


அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நடிகர்கள் அமிதாப் பச்சன், ரஜினிகாந்த், தொழில் அதிபர்கள் முகேஷ் அம்பானி மற்றும் கௌதம் அதானி,  கிரிக்கெட் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி, அனில் கும்ப்ளே உள்ளிட்டோரும் கலந்து கொண்டுள்ளனர்.


கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அயோத்தியில் குவிந்துள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள்,  கோஷங்களை எழுப்பியும்,  நடனமாடியும், காவி நிற கொடிகளை அசைத்தும்,பாடல்களை பாடிக்கொண்டும், இசைக்கருவிகளை வாசித்தும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால்  சாலைகள், ரயில் நிலையங்கள் நிரம்பி வழிகின்றன. 


 






பிரான பிரதிஷ்டை விழாவில் கலந்துக்கொள்ள இருக்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு ஸ்ரீ ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை சார்பில் பிரசாதம் வழங்கப்படுகிறது. இதற்காக 20,000 த்துக்கும் மேற்பட்ட பிரசாத பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் நெய், 5 வகையான உலர் பழங்கள், சர்க்கரை, உளுந்து மாவு கொண்டு தயார் செய்யப்பட்ட லட்டு, சரயு நதி தீர்த்தம், அட்சதை, வெற்றிலை தட்டு ஆகியவை அடங்கும். 


ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்றுள்ள நடிகர் அனுபம் கெர், "பல வருடங்களாக இந்த நாளுக்காக தான் காத்திருந்தோம், இறுதியாக அந்த நாள் வந்துவிட்டது. மேலும் நான் அனைத்து ராம பக்தர்களுடன் அயோத்தியை அடைந்தேன். விமானம் முழுவதும் பக்தியின் அற்புதமான சூழலைக் கொண்டிருந்தது” என தெரிவித்துள்ளார்.