இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மட்டுமல்லாமல், உலகின் முதன்மையான ராணுவ சக்தி கொண்ட நாடாக வெளிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று தெரிவித்துள்ளார்.
அரசின் முன்னுள்ள முக்கிய சவால் என்ன?
டெல்லியில் இன்று (ஏப்ரல் 17) நடந்த பாதுகாப்பு மாநாட்டில் சுயசார்பு மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் இந்தியாவின் தொலைநோக்குப் பார்வை குறித்து பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் விவரித்தார்.
உள்நாட்டுமயமாக்கல், புத்தாக்கம் மற்றும் உலகளாவிய தலைமைத்துவத்தில் கவனம் செலுத்தி, இந்தியா தனது எல்லைகளைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், சர்வதேச அளவிலான பாதுகாப்பு சுற்றுச்சூழல் அமைப்பில் முக்கிய பங்கேற்பு நாடாகத் தன்னை நிலைநிறுத்தி வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இந்தியா ஒரு வளர்ந்த நாடாக மட்டுமல்லாமல், உலகின் முதன்மையான ராணுவ சக்தி கொண்ட நாடாக வெளிப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை என்று அவர் மேலும் தெரிவித்தார். பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையில், பாதுகாப்புத் துறையை மீட்டெடுப்பதும், வலுப்படுத்துவதும் மத்திய அரசின் மிகப்பெரிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று பாதுகாப்பு அமைச்சர் மீண்டும் உறுதிபடுத்தினார்.
இந்தியா தனது பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இறக்குமதியைச் சார்ந்திருக்கும் மனநிலையை மாற்றுவதே அரசின் முன்னுள்ள முக்கிய சவால் என்று அவர் அவர் குறிப்பிட்டார். இந்தியா இறக்குமதிகளைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, தேவைகளைப் பூர்த்தி செய்வது மட்டுமல்லாமல், பாதுகாப்புத்துறையின் ஏற்றுமதி திறனையும் வலுப்படுத்துவதற்காக ஒரு பாதுகாப்புத் தொழில் வளாகத்தை உருவாக்கும் என்று அவர் உறுதிபட தெரிவித்தார்.
ராஜ்நாத் சிங் பேசியது என்ன?
இந்தியாவின் பாதுகாப்புத் துறை இன்று தன்னம்பிக்கை பாதையில் முன்னேறி வருவதாக அவர் தெரிவித்தார். இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் நாட்டின் பாதுகாப்பு உற்பத்தியை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், உலகளாவிய பாதுகாப்பு விநியோகச் சங்கிலியை மீள்தன்மை கொண்டதாகவும் நெகிழ்வானதாகவும் மாற்றும் திறனையும் கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
இந்தியாவின் வளர்ந்து வரும் பாதுகாப்புத் திறன், போரைத் தூண்டும் நோக்கம் கொண்டதல்ல என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெளிவுப்படுத்தினார். நாம் வலுவாக இருக்கும்போதுதான் அமைதி சாத்தியமாகும் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.