ராஜஸ்தானில் வந்தே பாரத் ரயிலின் இருப்புப் பாதையில் கற்கள் குவிக்கப்பட்டு இருந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.


வந்தே பாரத் ரயில்:


ராஜஸ்தான் மாநிலத்தில் வந்தே பாரத் ரயிலை கவிழ்க்கும் விதமாக, நடைபெற்ற முயற்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. உதய்பூர் மற்றும் ஜெய்பூர் இடையேயான வந்தே பாரத் ரயில் சேவையை, கடந்த செப்டம்பர் மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்நிலையில், அந்த ரயில் சேவையில் விபத்தை ஏற்படுத்தும் விதமாக தான் ஒரு முயற்சி நடந்துள்ளது.






ரயிலை கவிழ்க்க சதி?


ஆண்டு இறுதியில் ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி, பிரதமர் மோடி சித்தோர்கர் பகுதியில் பாஜக சார்பில் இன்று பேரணி நடைபெற்றது. அதில், பிரதமர் மோடியும் பங்கேற்று பேசினார். இந்நிலையில் அதேபகுதியில் தான், உதய்பூர் மற்றும் ஜெய்பூர் இடையேயான வந்தே பாரத் ரயிலை கவிழ்க்க சதி நடந்துள்ளது.


கங்க்ரார் மற்றும் சோனியானா ரயில் நிலையங்களுக்கு இடைபட்ட பகுதியில்,  இருப்புப் பாதையில் கற்கள் வைக்கப்பட்டு இருந்தன. இருப்பு பாதைக்கு இடையில் கம்பிகள் கூட சொறுகப்பட்டு இருந்தன. இதனை கவனித்த ஓட்டுனர், உடனடியாக சுதாரித்துக்கொண்டு எமர்ஜென்சி பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தியுள்ளார். இதனால், பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் நிகழ்ச்சி நடைபெற்ற பகுதியிலேயே, வந்தே பாரத் ரயிலை கவிழ்க்கும் முயற்சி நடைபெற்றதால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.


போக்குவரத்து பாதிப்பு:


வந்தே பாரத் ரயிலை உடனடியாக நிறுத்திய ஓட்டுனர், ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் அளித்தார். இதையடுத்து அங்கு வந்தவர்கள் ஆய்வு செய்து இருப்புப் பாதையில் இருந்த கற்கள் மற்றும் கம்பிகளை அகற்றியதோடு, சம்பவம் தொடர்பாக வழக்கும் பதிவு செய்தனர்.


இதனால், அந்த வழித்தடத்தில் ரயில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


பிரதமர் தொடங்கி வைத்த திட்டம்:


உதய்பூர் மற்றும் ஜெய்பூர் இடையேயான இந்த ரயில் சேவையை, கடந்த மாதம் 24ம் தேதி பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த ரயிலானது 435 கிலோ மீட்டர் தூரத்தை 6 மணி நேரம் 15 நிமிடங்களில் கடக்கிறது. முன்பு இதே மார்க்கத்தில் பயணித்த இந்த ரயில்கள் இந்த தூரத்தை 7 மணி நேரத்தில் கடந்தது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் அதிகபட்சமாக மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. அதிவேகத்தில் செல்லும் இந்த ரயில் விபத்திற்கு ஆளாகியிருந்தால், விளைவுகள் மோசமாக இருந்திருக்கக் கூடும்.