சமூகம் முன்னேற்றம் அடைந்ததாக சொல்லி கொண்டாலும், தொழில்நுட்ப ரீதியாக எவ்வளவு வளர்ச்சி அடைந்தாலும், சாதிய கொடூரங்கள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக, தலித் பெண்கள், சிறுமிகளுக்கு எதிராக நடத்தப்படும் வன்முறை சம்பவங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.


ராஜிஸ்தானில் கொடூரம்:


அதன் தொடர்ச்சியாக, ராஜஸ்தான் மாநிலத்தில் மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. ஜோத்பூரில் நேற்று தலித் சிறுமியை அவரது காதலன் கண்முன்னே மூன்று கல்லூரி மாணவர்கள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்கு முன்பு, அவரது காதலனை குற்றம்சாட்டப்பட்ட மூன்று மாணவர்கள் சரமாரியாக தாக்கியுள்ளனர். சம்பவம் நடைபெற்ற சில மணிநேரங்களிலேயே மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சம்பவத்தை விவரித்துள்ள மூத்த காவல்துறை அதிகாரி அம்ரிதா துஹான், "சிறுமியும் அவரது காதலனும் சனிக்கிழமை அஜ்மீரில் உள்ள அவர்களின் வீட்டில் இருந்து தப்பி ஓடி வந்துள்ளனர். இரவு 10:30 மணியளவில் பேருந்தில் ஜோத்பூருக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. தங்குவதற்காக அவர்கள் கெஸ்ட் ஹவுஸ்க்கு சென்றுள்ளனர். ஆனால், விடுதி பராமரிப்பாளர் சிறுமியிடம் தவறாக நடந்து கொண்டதை அடுத்து அவர்கள் வெளியேறினர்.


மனதை பதற வைக்கும் சம்பவம்:


கெஸ்ட் ஹவுஸ்க்கு வெளியே தம்பதியர் நின்று கொண்டிருந்தபோது, ​​குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேர் -- சமந்தர் சிங், தரம்பால் சிங் மற்றும் பாதம் சிங் -- அவர்களை அணுகி, உணவு வழங்கி, அவர்களுக்குத் தங்குவதற்கு ஒரு இடத்தைக் கண்டுபிடித்துத் தருவதாக உறுதியளித்து அவர்களுடன் நட்பு பாராட்டுவது போல் நடித்துள்ளனர்.


நேற்று அதிகாலை 4 மணியளவில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் இருவரையும் ரயில் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, ஜேஎன்வியூ பழைய வளாகத்தில் உள்ள ஹாக்கி மைதானத்திற்குச் ஏமாற்றி அழைத்து சென்றனர். மைதானத்திற்கு வந்த பிறகு, மூன்று மாணவர்கள் சிறுவனைத் தாக்கி, மைனர் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து, அங்கிருந்து தப்பிச் சென்றனர்" என்றார்.


தலித் சிறுமிக்கு நேர்ந்த பயங்கரம்:


காலை நடைப்பயிற்சி செய்பவர்கள் மைதானத்திற்கு வரத் தொடங்கியதால் மூவரும் அவசரம் அவசரமாக தப்பி சென்றுள்ளனர். சிறுமியின் காதலன், நடைபயற்சிக்கு வந்தவர்களிடம் உதவி கோரினார். பின்னர், அவர்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.


மூன்று மணி நேரத்திற்குள், போலீசார் குற்றவாளிகளைத் தேடத் தொடங்கினர். மொப்ப நாய்கள், தடய அறிவியல் குழுவினர், சிசிடிவி காட்சிகளின் உதவியுடன், ஜோத்பூரில் உள்ள கணேஷ்புராவில் உள்ள ஒரு வீட்டில் மூவரையும் காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். அவர்கள் தப்பிக்க முயன்றனர். ஆனால், அவர்கள் கீழே விழுந்து காயமடைந்தனர். அவர்களில் இருவரின் கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டது. மூன்றாவது நபருக்கு கையில் காயம் ஏற்பட்டது.


சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக கெஸ்ட் ஹவுஸ் பராமரிப்பாளரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.