ராஜஸ்தான் இந்நாள், முன்னாள் முதல்வர்களுக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட், முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜே ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.


இந்நிலையில் அசோக் கெலாட் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து அறிவித்துள்ளார். "எனக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. லேசான அறிகுறிகள் உள்ளது. வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டு வேலை செய்கிறேன். மக்கள் அனைவரும் கொரோனா பரவல் குறித்து எச்சரிக்கையுடன் இருக்கவும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிதல், கைகளை சுத்தமாகப் பேணுதல் ஆகியனவற்றைப் பின்பற்றவும்" என்று இந்தியில் பதிவிட்டுள்ளார்.


ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "எனது கொரோனா பரிசோதனை முடிவு வந்துள்ளது. எனக்கு தொற்று உறுதியானது. நான் மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் கடந்த சில நாட்களில் தொடர்பில் இருந்தவர்கள் முன்னெச்சரிக்கையாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும்" என்று பதிவிட்டுள்ளார்.


ராஜஸ்தான் மாநிலத்தில் திங்கள்கிழமை நிலவரப்படி மொத்தம் 189 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. நேற்று மட்டும் 17 பேருக்கு தொற்று உறுதியானது.


கொரோனா நிலவரம்:


இந்தியாவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் கொரோனா பாதித்து சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், இந்தியாவில் நேற்று (திங்கள்கிழமை) ஒரே நாளில் 3,038 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பவர்களின் எண்ணிக்கை 21,179 ஆக உயர்ந்துள்ளது.  


கொரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 4 கோடியே 47 லட்சத்து 29 ஆயிரத்து 284 ஆக உள்ளது. நேற்று ஒரு நாளில் மட்டும் 2,609 பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.


கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 9 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்படி, கோவிட் தொற்றால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 901 ஆக அதிகரித்துள்ளது.


எக்ஸ்.பி.பி.1.16 திரிபு:


கடந்த பிப்ரவரி மாதம் முதல் ஒமைக்ரானின் புதிய வகையான எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பரவ தொடங்கி உள்ளது. முதலில் அமெரிக்கா, சிங்கப்பூர், இந்தோனேஷியா, ஆஸ்திரேலியா, டென்மார்க் உள்ளிட்ட 14 நாடுகளில் காணப்பட்ட எக்ஸ்.பி.பி.1.16 வகை திரிபு பின்னர் இந்தியாவிலும் பரவ தொடங்கியது. இதனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு படிப்படியாக அதிகரித்து வருகிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை கொரோனா தினசரி பாதிப்பு 200-க்கும் கீழ் இருந்த நிலையில் தற்போது 3 ஆயிரத்தை தாண்டிய வண்ணம் உள்ளது.


XBB வகை தொற்று வேகமாக பரவக் கூடியதாக உள்ளது. தும்மல் மூலமாக கூட அடுத்தவர்களுக்கு பரவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் தற்போது பாதிப்பு எண்ணிகை அதிகரித்து வருகிறது. ஆனால், மரணங்களின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகி வருகிறது. தீவிர பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் நிலையும் மிகவும் குறைவாகத்தான் உள்ளது. மேலும், இந்த வகை வைரஸ்களில் வீரியம் குறைவாகவே உள்ளது. வேகமாக பரவும் என்கிற காரணத்தால் தான் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்று தொடர்ந்து அறிவுறுத்தல் வழங்கப்பட்டு வருகிறது.