தான் வளர்க்கும் நாயை கொடுமைப்படுத்தியதால், மருத்துவர் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கும் செய்தி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


செல்லப்பிராணிகளை சிலர் தங்களின் குடும்பத்தில் ஒருவராகத்தான் வளர்த்து வருகின்றார்கள். அதற்கு பெயர் வைப்பது , சாப்பாடு ஊட்டுவது , ஆடைகள் அணிவிப்பது என அத்தனை அன்பான வீடியோக்களை இணையத்தில் பார்த்திருக்கிறோம்  இந்த நிலையில் புகழ்பெற்ற மருத்துவர் ஒருவர், நாய் ஒன்றினை கயிறு கட்டி , காரை ஓட்டியபடியே இழுத்து வந்த காட்சிகள் நாய் பிரியர்களை மட்டுமல்ல மனிதாபிமானம் மிக்க அனைவரையும் கலங்கடிப்பதாகத்தான் இருக்கிறது. 


ராஜஸ்தான் மாநிலத்தில் , ஜோத்பூர் பகுதியை சேர்ந்தவர்  ரஜ்னீஷ் கால்வா . இவர் அங்குள்ள மகாத்மா காந்தி மருத்துவமனையில் முதன்மையாக பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார். ரஜ்னீஷ் என்றாலே அந்த பகுதியில் பலருக்கும் தெரிந்திருக்கிறது. அந்த அளவுக்கு பிரபலமாக இருக்கிறார்.இவர் வளர்ப்பு நாயை கயிறு கட்டி, அதனை தனது வாகனத்திற்கு பின்னால் ஓடி வர வைத்துவிட்டு காரை ஓட்டிச்செல்கிறார். நாய் இங்கும் அங்குமாக  பலவீனமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும் நீளமான கயிற்றின் கட்டுப்பாட்டில் நாய் இருப்பதால் , சாலையில் அலைமோதுகிறது. இது அங்கு செல்லும் வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாகத்தானே இருக்கும். ஒருவேளை மருத்துவர் அறியாமல் இப்படியாக செய்துவிட்டாரோ என சிலர் அவரிடம் , நாயை அவிழ்த்துவிடுமாறு கூற , அதனை மருத்துவர் காதில் வாங்கிக்கொள்ளவில்லை என தெரிகிறது. ஒரு உயிரின் மீது மருத்துவரை காட்டிலும் யாருக்கு அதிக அக்கறை இருக்க முடியும். அவரே இப்படி ஒரு உயிரை கொடுமைப்படுத்தும் இந்த காட்சியை சிலர் இணையத்தில் வைரலாகி வருகிறது.







இதற்கிடையில் மருத்துவரின் வாகனத்தை வழி மறித்த சிலர் அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபடவே , விலங்குகளுக்காக பணிபுரியும் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. உடனே  மருத்துவர் அவர்களுடனும் சண்டையிட்டுள்ளார். இதையடுத்து உள்ளூர் காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இளைஞர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்களின் உதவியுடன், டாக்டரின் பிடியில் இருந்து நாயை மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த நிலையில் சம்பவத்தை நேரில் பார்த்த அபர்ணா என்னும் பெண் , மருத்துவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். , ​​குற்றம் சாட்டப்பட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து, போலீசார் அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஐபிசியின் 428, 429 பிரிவுகள் மற்றும் பிசிஏ சட்டத்தின் பிரிவு 11ன் கீழ், நாயை துன்புறுத்துவது மற்றும் அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.


விலங்கு பிறப்பு கட்டுப்பாடு-2011 இன் கீழ், தெரு நாய்களின் அச்சுறுத்தல் உள்ள பகுதியில், அவற்றை கருத்தடை செய்யலாம், ஆனால் கொல்லவோ துன்புறுத்தவோ முடியாது. இப்படியான தெரு நாய்கள் அல்லது கால்நடைகளை யாராவது துன்புறுத்தினாலோ அல்லது கொல்ல முயன்றாலோ அவர்கள் மீது விலங்கு வதை தடுப்புச்சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம் என்றார் அபர்ணா.