ராஜஸ்தான் மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா புதன்கிழமை மாநில பட்ஜெட் குறித்து பதிலளித்த போது கூறிய ‘கருப்பு மணப்பெண்’ என்கிற கருத்துக்கு தற்போது மன்னிப்பு கேட்டுள்ளார். 'பட்ஜெட் குறித்து கருத்து தெரிவிக்கும் போது, ​​நான் பேசும் போது பொதுவாக பயன்படுத்தாத சில வார்த்தைகளை நான் பேசினேன், இந்த வார்த்தைகளால் யாருடைய மனதையாவது நான் புண்படுத்தியிருந்தால் அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்' என்று பூனியா வியாழன் அன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்த விவகாரம் தொடர்பாக எழுந்த சர்ச்சையால் வியாழன் அன்று மாநிலங்களவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன. பூனியா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆளும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். காங்கிரஸ் பெண் உறுப்பினர்கள் பூனியாவுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி அவையின் மத்திக்குச் சென்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மம்தா பூபேஷ் கூறுகையில், பூனியா பெண்கள் குறித்து அநாகரீகமான கருத்துகளை கூறியது வருத்தமளிக்கிறது என்றார். 


பாஜக எம்எல்ஏக்களும் காங்கிரஸ் அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர், அவையின் சபாநாயகர் சிபி ஜோஷி அவையை அரை மணி நேரம் தள்ளிவைத்தார்.






பட்ஜெட் குறித்து பேசியிருந்த சதீஷ் பூனியா , "இது ஒரு கண்கவர் பட்ஜெட். இது ஒரு கருப்பு மணப்பெண்ணை அழகு நிலையத்திற்கு அழைத்துச்சென்று நல்ல மேக்-அப் செய்து பரிசளித்தது போல் தெரிகிறது,இதுதவிர இந்த பட்ஜெட்டில் என்னால் வேறு எதுவும் பார்க்க முடியவில்லை", இந்த கருத்துக்கு காங்கிரஸ் மற்றும் ராஜஸ்தான் மகளிர் ஆணைய தலைவர் ரெஹானா ரியாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.


இதற்கிடையில், அனைத்து எம்எல்ஏக்களுக்கும் முதல்வர் கெலாட் கவர்ச்சியான பரிசு வழங்கியதும் தற்போது  சர்ச்சைக்குரிய செய்தியாகி வருகிறது. பட்ஜெட்டுக்கு பிறகு 200 எம்எல்ஏக்களுக்கும் ஐபோன் 13 பரிசாக கெலாட் வழங்கியுள்ளார். அரசு கருவூலத்தில் ஏற்படும் நிதிச்சுமையை கருத்தில் கொண்டு இந்த பரிசை திரும்ப அளிக்க பாஜக எம்எல்ஏக்கள் முடிவு செய்துள்ளனர். ‘மாநில அரசின் நிதிச்சுமையைக் கருத்தில் கொண்டு காங்கிரஸ் அரசு கொடுத்த ஐபோனை பாஜக எம்எல்ஏக்கள் திருப்பித் தருவார்கள்’ என்று மாநில பாஜக தலைவர் சதீஷ் பூனியா ட்வீட் செய்துள்ளார்.