ஒடிசா ரயில் விபத்தின் மூலம் ரயில்வே அமைச்சரின் பொய்கள் அம்பலமாகிவிட்டதாக, பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே சரமாரியாக கேள்விகளை எழுப்பியுள்ளார். 


ஒடிஷா ரயில் விபத்து:


ஒடிசாவில் 3 ரயில்கள் மோதி 275 பேரின் உயிரை பறித்த விபத்து தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் “ நடந்த விபத்து நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில் ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கட்டாய பாதுகாப்பு தரநிலைகளை நிறுவுவதற்கு முன்னுரிமை அளிப்பதே இன்றைய மிக முக்கியமான படியாகும்.


பிரதமருக்கு சரமாரி கேள்விகள்..


ஆஸ்திரேலிய நாட்டின் ஒட்டுமொத்த மக்கள் தொகைக்கு இணையான அளவிற்கு, இந்தியாவில் ஒவ்வொரு நாளும் பொதுமக்கள் ரயில் பயணங்கள் மேற்கொள்கின்றனர். அத்தகைய துறையின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தாமல், மேம்போக்கான திட்டங்கள் மட்டுமே செயல்படுத்தப்படுகின்றன. ரயில்வே துறையை வலிமைப்படுத்தாமல் மாற்றாந்தாய் பிள்ளை போல மத்திய அரசு கையாளுகிறது. 



  • இந்திய ரயில்வேதுறையில் காலியாக உள்ள 3 லட்சம் பணியிடங்கள் 9 ஆண்டுகளாக நிரப்பப்படமால் இருப்பது ஏன்? 90-களில் 18 லட்சம் பேர் பணியாற்றிக்கொண்டிருந்த ரயில்வேதுறையில் தற்போது 12 லட்சம் பேர் மட்டுமே உள்ளனர். அதிலும் 3.18 லட்சம் பேர் ஒப்பந்த ஊழியர்கள் ஆவர்.

  • ரயில் ஓட்டுநர்களை நிர்ணயிக்கப்பட்ட பணி நேரத்தை விட கூடுதலாக பணிபுரிய கட்டாயப்படுத்துவது ஏன்?

  • குற்றச்சம்பவங்களை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள சிபிஐ அமைப்பிற்கு, ரயில் விபத்து குறித்து விசாரிக்க பரிந்துரைத்து இருப்பது பிரச்னையை திசை திருப்புவதற்கா?

  • 2016ம் ஆண்டு கான்பூரில் ரயில் கவிழ்ந்து 150 பேர் உயிரிழந்தது தொடர்பாக, தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. ஆனால், குற்றப்பத்திரிக்கை கூட தாக்கல் செய்யாமல் அந்த வழக்கு விசாரணை முடித்துக்கொள்ளப்பட்டது. அந்த 150 பேரின் மரணத்திற்கு யார் தான் காரணம்?

  • ரயிலில் பெண்கள், குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டது ஏன்?

  • காங்கிரஸின் ”ரக்‌ஷா கவாச்”  என்ற திட்டட்தை கவாச் என பெயர் மாற்றிய மத்திய அரசு, அதை 4% வழித்தடங்களில் மட்டுமே செயல்படுத்தியிருப்பது ஏன்?

  • சிக்னல் அமைப்புகளில் உள்ள கோளாறு, ரயில்கள் தடம் புரல்வது குறித்து வெளியான அறிக்கைகளை கண்டுகொள்ளாதது என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.


அதோடு, ஒடிசாவில் நிகழ்ந்துள்ள விபத்து நமது கண்களை திறக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அம்சங்கள் தொடர்பாக துறைசார் அமைச்சர் கூறிய அனைத்தும் பொய் என்பது அம்பலமாகியுள்ளது. எனவே, விபத்துக்கான உண்மையான காரணம் என்ன என்பதை அரசு மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்” என காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன் கார்கே குறிப்பிட்டுள்ளார்.