ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டதால், இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்ற அவைகள் கூடியதும் சில நொடிகளிலேயே ஒத்திவைக்கப்பட்டது. இதில் மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 


பாராளுமன்றத்தின் இன்றைய கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பு காங்கிரஸ் சார்பில், ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகா அர்ஜுனா கார்கே அலுவலகத்தில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.  அதில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளான திமுக, மதிமுக, சமாஜ்வாதி கட்சி, சிபிஐ எம், சிபிஐ, ஆம் ஆத்மி மற்றும் சிவசேனா  உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் பங்கேற்றன. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பிக்களும் கலந்து கொண்டணர். 


நீண்ட காலமாக மத்திய அரசியலில் முக்கியப் புள்ளியாக நினைக்கும் மம்தா பானர்ஜி, ராகுல் காந்திக்கு ஆதரவு தெரிவித்திருப்பது  மத்திய அரசியலில் பெரும் திருப்பமாக பார்க்கப்படுகிறது. 


அதேபோல், உத்தர பிரதேசத்தில் காங்ஜ்கிரஸ் கட்சி வளர முடியாமல் போனதற்கான காரணங்களில் ஒன்றாக இருந்த கட்சியான சமாஜ்வாதி கட்சியும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளது. இதனால் ராகுல் காந்தி விவகாரம் மத்திய அரசியலில் அனைத்து எதிர்க்கட்சிகளையும் இணைத்துள்ளதால், காங்கிர்ஸ் கட்சி இதனை பாஜகவிற்கு எதிரான அணியாக மாற்றவும் யூகம் வகுக்கலாம் எனவும் அரசியல் வட்டாரங்களில் கூறப்படுகிறது. 


அதன் பின்னர் பாராளுமன்றத்தில் இரு அவைகளும் கூடியது. அவை கூடிய ஒரு சில நொடிகளிலேயே காங்கிரஸ் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மக்களவை மாலை 4 மணி வரையும், மாநிலங்களவை மதியம் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 9 நாட்கள் பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்ட நிலையில்,  தற்போது 10வது நாளிலும் ஒத்திவைப்பு தொடர்ந்துள்ளது. இதன் பின்னர், பாராளுமன்றத்தில் உள்ளிருந்து பாராளுமன்ற வளாகத்திற்கு வந்த எதிர்க்கட்சிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 


2014 நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரையின் போது குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசியதாக, ராகுல் காந்திக்கு எதிராக சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அதன் மீதான விசாரணையின் முடிவில், ராகுல் காந்தி குற்றவாளி என அறிவித்த நீதிமன்றம், 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்தது. அதேநேரம், ராகுல் காந்திக்கு ஜாமீன் வழங்கியதோடு, மேல் முறையீடு செய்ய 1 மாத கால அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக வயநாடு தொகுதியின் எம். பி. பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.


இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ராகுல் காந்தி, டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்து மார்ச் 25 அன்று பேசினார். 


அப்போது கூறிய அவர், “ஒரு முறை அல்ல, நிரந்தரமாக என்னைத் தகுதி நீக்கம் செய்தாலும் கேள்வி கேட்பதை நான் நிறுத்தப்போவதில்லை. மன்னிப்பு கேட்க நான் சாவர்க்கர் அல்ல, காந்தி.


நான் பேசுவதைக் கண்டு பிரதமர் மோடி அஞ்சுகிறார். அதானி பற்றி நான் பேசும்போது, அவரின் கண்களில் பயத்தைப் பார்த்தேன். பிரதமரின் அச்சத்தை திசை திருப்புவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. எனக்கு உண்மையைப் பேசுவதில் மட்டுமே விருப்பம் உள்ளது. அதை தொடர்வேன் என குறிப்பிட்டு பேசினார்.