சாவர்க்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவித்ததாக தொடரப்பட்ட அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு புனே நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது. வரும் மே 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது. ஏற்கனவே, சாவர்க்கர் தொடர்பான மற்றொரு வழக்கில், அவரை பற்றி இனி அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தது.

சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி கூறியது என்ன?

சாவர்க்கர் பற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்து வரும் ராகுல் காந்தி, சில மாதங்களுக்கு முன்பு, லண்டனில் சில கருத்துகளை தெரிவித்திருந்தார். "அவர்கள் (சாவர்க்கரும் அவரது நண்பர்களும்) ஒரு முஸ்லிமை அடித்து மகிழ்ச்சியாக உணர்ந்தார்கள். ஐந்து பேர் ஒருவரை அடித்து, ஒருவர் மகிழ்ச்சியாக இருந்தால், அது கோழைத்தனம். சாவர்க்கருடன் சேர்ந்து பதினைந்து பேர் ஒருவரை அடிக்கிறார்கள். இதுதான் அவர்களின் சித்தாந்தம்" என ராகுல் காந்தி கூறியிருந்தார்.

ராகுல் காந்தியின் இந்த கருத்துக்கு எதிராக சாவர்க்கரின் உறவினர் ஒருவர் புகார் அளித்திருந்தார். இந்த வழக்கில் வரும் மே 9ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என புனே நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே, சாவர்க்கர் தொடர்பான மற்றொரு வழக்கில், அவரை பற்றி இனி அவதூறு கருத்துகளை தெரிவிக்கக் கூடாது என ராகுல் காந்திக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருந்தது.

கடந்த 2022ஆம் ஆண்டு, மகாராஷ்டிரா மாநிலத்தில் பாரத் ஜோடோ யாத்திரையின்போது சாவர்க்கர் பற்றி ராகுல் காந்தி சில கருத்துகளை தெரிவித்திருந்தார். சாவர்க்கர், ஆங்கிலேயர்களின் சேவகனாக இருந்ததாகவும் அவர்களிடம் இருந்தே ஓய்வூதியம் பெற்றதாகவும் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

தொடரும் சிக்கல்? 

இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கறிஞர் நிருபேந்திர பாண்டே புகார் அளித்திருந்தார். சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்பும் நோக்கில் இப்படி பேசியதாகவும், சாவர்க்கரை உள்நோக்கத்துடன் அவமதித்துள்ளதாகவும் ராகுல் காந்திக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில் ராகுல் காந்திக்கு விசாரணை நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இதையடுத்து, தனக்கு எதிராக அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய வேண்டும் என அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்தார். சம்மனை ரத்து செய்ய அலகாபாத் உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததை தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தை அணுகினார் ராகுல் காந்தி.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் மன்மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு, ராகுல் காந்திக்கு எதிராக தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை விதித்தது. இருப்பினும், ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை மேற்கொண்ட நீதிபதிகள், "அவர் (சாவர்க்கர்) ஒரு உயர்ந்த அந்தஸ்து கொண்ட மனிதர். அவர் அரசியல் கட்சியின் தலைவர். ஏன் இப்படி பிரச்சனையை தூண்ட வேண்டும்?

அவரை வணங்கி வழிபடும் மகாராஷ்டிராவில் உள்ள அகோலாவுக்குச் சென்று, இப்படி பேசுங்கள் பார்க்கலாம். இதைச் செய்யாதீர்கள். ஏன் இப்படி பேசுனீர்கள்?" என கேள்வி எழுப்பினர்.