வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து காங்கிரஸ் தொடர் விமர்சனங்களை மேற்கொண்டு வருகிறது.


இதையடுத்து, காங்கிரஸ் கட்சியை மக்களிடம் மீண்டும் கொண்டு சேர்க்கும் வகையில் அக்கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, இந்திய ஒற்றுமை நடைபயணத்தை தலைமை தாங்கி நடத்தினார்.


இதில், பலத்தரப்பட்ட மக்களிடம் உரையாடி அவர்களின் குறைகளை கேட்டறிந்து வருகிறார் ராகுல் காந்தி. தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட நடைபயணம் கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, மகாராஷ்டிரா, சட்டீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், ஹரியானா, டெல்லி, ஹரியானா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து காஷ்மீரை சென்றடைந்தது.


இந்நிலையில், நடுவில் இடைவெளியுடன் மொத்தம் 146 நாட்கள் நடந்த இந்திய ஒற்றுமை பயணம் இன்று முடிவுக்கு வந்தது. இதன் நிறைவு விழாவில் பேசிய ராகுல் காந்தி, காஷ்மீருக்கு சென்றால் தான் தாக்குதலுக்கு உள்ளாகலாம் என எச்சரிக்கப்பட்டதாகவும் ஆனால், மக்கள் குண்டுகளை அளிக்கவில்லை அன்பை அளித்ததாக உருக்கமாக பேசியுள்ளார்.


தொடர்ந்து பேசிய அவர், "ஜம்மு காஷ்மீரில் நான் நடந்தது போல பாஜக உறுப்பினர்களால் நடக்க முடியாது. அவர்களுக்கு பயம் உள்ளது" என்றார்.


தனது தந்தை ராஜீவ் காந்தியின் படுகொலையை நினைவுகூர்ந்து பேசிய அவர், புல்வாமா தாக்குதலில் தங்கள் உறவினர்களை இழந்தவர்களின் வலியை புரிந்துகொண்டேன் என்றார்.


"நான் யாத்திரையை எனக்காகவோ காங்கிரசுக்காகவோ மேற்கொள்ளவில்லை. நாட்டின் அடித்தளத்தை அழிக்க நினைக்கும் சித்தாந்தத்திற்கு எதிராக நிற்பதே நோக்கம்" என்றார்.


நடைபயணத்தின் நிறைவு விழாவில் கலந்து கொள்ள 21 எதிர்கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலை மூடப்பட்டதால் எதிர்கட்சிகளால் இதில் கலந்து கொள்ள முடியவில்லை.


 






மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக), சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் (என்சிபி), தேஜஸ்வி யாதவ் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி), நிதிஷ் குமாரின்  ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.


 






முன்னதாக பேசிய பிரியங்கா காந்தி, "இந்த ஐந்து மாத இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ராகுல் காந்தி எங்கு சென்றாலும் மக்கள் வந்து ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலம் மற்றும் அதன் பன்முகத்தன்மையின் மீது இந்த நாட்டில் இன்னும் ஒரு பேரார்வம் உள்ளது" என்றார்.