பீகாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை மேற்கொண்ட தேர்தல் ஆணையம், அங்கு 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த பட்டியலில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்ட பல வாக்காளர்களை ராகுல் காந்தி சந்தித்து பேசியுள்ளார். இந்த நிலையில், அது குறித்து தேர்தல் ஆணையத்தை கிண்டல் செய்து அவர் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
“இறந்தவர்களுடன் தேநீர் குடித்தேன், வாய்ப்பளித்த தேர்தல் ஆணையத்திற்கு நன்றி“
பீகாரில், இறந்துவிட்டதாக தேர்தல் ஆணையத்தால் கூறப்பட்ட வாக்காளர்களுடனான சந்திப்பு குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில், வீடியோவுடன் ராகுல் காந்தி பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில், வாழ்க்கையில் பல சுவாரஸ்யமான அனுபவங்களை பெற்றிருக்கிறேன், ஆனால் இறந்தவர்களுடன் தேநீர் குடிக்கும் வாய்ப்பு எனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை. இந்த வித்தியாசமான அனுபவத்திற்கு, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி என தெரிவித்துள்ளார்.
பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கிய தேர்தல் ஆணையம்
பீகார் மாநிலத்தில், இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த சூழலில், அம்மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
இந்த சிறப்பு திருத்தத்தின்போது, 65 லட்சம் வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரு இடங்களில் பதிவு செய்தவர்கள் போன்றவற்றை கண்டறிந், அந்த வாக்காளர்களின் பெயர்களை நீக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.
இந்நிலையில், இந்த விவாகரத்தை கையிலெடுத்த மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, தேர்தல் ஆணையத்தின் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். பாஜக உடன் இணைந்து, தேர்தல் ஆணையம் சதி செய்வதாகவும், வாக்குத் திருட்டு நடைபெறுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், கர்நாடகா மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில், வாக்குப் பதிவில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் இருந்ததாகவும், பல ஆதாரங்களை வெளியிட்டு புகார் தெரிவித்தார். ஆனால், அவற்றை தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
இப்படிப்பட்ட சூழலில் தான், பீகாரில், தேர்தல் ஆணையத்தால் இறந்தவர்கள் எனக் கூறி வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் சிலரை சந்தித்தார் ராகுல் காந்தி. அதைத் தொடர்ந்துதான், தேர்தல் ஆணையத்தை கிண்டல் செய்து தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.