பீகார் சட்டசபை தேர்தலில், காங்கிரஸ் கூட்டணி படுதோல்வியை சந்தித்துள்ளது. இந்நிலையில், இந்த தேர்தல் தோல்வி குறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, ஆரம்பத்திலிருந்தே இந்த தேர்தல் நியாயமற்றதாக நடந்ததாக குறிப்பிட்டுள்ளார். அவரது பதிவின் முழு விவரத்தை தற்போது காணலாம்.
பீகார் தேர்தலில் படுதோல்வியை சந்தித்த காங்கிரஸ் கூட்டணி
பீகாரில் கடந்த 6-ம் தேதி மற்றும் 11-ம் தேதி ஆகிய இரண்டு நாட்களில், 243 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே, தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றது. அதிலும், மிகப் பெரிய அளவில் 200 தொகுதிகளுக்கு மேல் முன்னிலை பெற்றது. நேரம் செல்லச் செல்ல தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஏறக்குறைய அனைத்து தொதிகளுக்கும் முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த தேர்தலை விட நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனத தளம் கட்சி இந்த முறை அதிகமான இடங்களை கைப்பற்றுகிறது. கடந்த முறை 43 இடங்களில்தான் அந்த கட்சி வெற்றி பெற்றிருந்தது. ஆனால், தற்போது 85 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அப்படியே இந்தப் பக்கம் வந்தால், காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் தோல்வியை சந்தித்துள்ளது. கடந்த தேர்தலில் 17 இடங்களில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ், இந்த முறை 61 இடங்களில் போட்டியிட்டது. ஆனால், அதில் 6 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ராஷ்டிரிய ஜனதா தளம் 25 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. கடந்த முறை லாலு பிரசாத் யாதவின் இந்த கட்சி 75 இடங்களில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
ராகுல் காந்தியின் ட்வீட் என்ன.?
இந்த தேர்தல் தோல்வி குறித்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ள ராகுல் காந்தி, “மகா கூட்டணி மீது நம்பிக்கை வைத்த பீகாரில் உள்ள லட்சக்கணக்கான வாக்காளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்“ என கூறியுள்ளார்.
மேலும், பீகாரில் இந்த முடிவு உண்மையிலேயே ஆச்சரியமளிக்கிறது எனவும், ஆரம்பத்திலிருந்தே நியாயமற்ற முறையில் நடந்த தேர்தலில் நாம் வெற்றி பெற முடியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அதோடு, இந்தப் போராட்டம் அரசியலமைப்புச் சட்டம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கானது என்றும், காங்கிரஸ் கட்சியும், இண்டியா கூட்டணியும் இந்த முடிவை ஆழமாக மதிப்பாய்வு செய்து, ஜனநாயகத்தைக் காப்பாற்ற தங்கள் முயற்சிகளை இன்னும் திறம்படச் செய்யும் எனவும் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.