சீக்கிய இளைஞர் ஒருவர் கோபத்துடன் எழுப்பிய கேள்விகளுக்கு ராகுல் காந்தி பொறுப்புடன் பதில் அளித்திருப்பது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சீக்கியர்களுக்கு எதிராக கடந்த 1984ஆம் ஆண்டு நடத்தப்பட்ட கலவரத்தில் காங்கிரஸ் கட்சிக்கு பங்கு இருப்பதாக சீக்கிய இளைஞர் குற்றம்சாட்டினார். இதற்கு சாந்தமாக பதில் அளித்த ராகுல் காந்தி, கடந்த காலத்தில் செய்த அனைத்து தவறுகளுக்கும் தான் பொறுப்பேற்று கொள்வதாக கூறியுள்ளார்.

Continues below advertisement

கோபத்தில் சீறிய சீக்கிய இளைஞர்:

இரண்டு வாரங்களுக்கு முன்பு, அமெரிக்காவில் உள்ள பிரவுன் பல்கலைக்கழகத்தின் வாட்சன் சர்வதேச மற்றும் பொது விவகாரங்களுக்கான கல்வி நிறுவனத்தில் (Watson Institute for International and Public Affairs) மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பங்கேற்றார்.

அப்போது, சீக்கிய இளைஞர் ஒருவர், ராகுல் காந்தியிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பினார். கோபத்துடன் கொதித்த சீக்கிய இளைஞர், "பாஜக இப்படி செய்யும், அப்படி செய்யும் என்று சீக்கியர்களிடையே ஒரு பயத்தை நீங்கள் உருவாக்குகிறீர்கள்.

Continues below advertisement

சாந்தமாக பதில் அளித்த ராகுல் காந்தி:

அரசியல் எப்படி அச்சமற்றதாக இருக்க வேண்டும் என்று நீங்கள் பேசினீர்கள். நாங்கள் கடா (வளையம்) அணிய விரும்பவில்லை. தலைப்பாகை கட்ட விரும்பவில்லை. கருத்து சுதந்திரத்தை விரும்புகிறோம். இது கடந்த காலத்தில் காங்கிரஸ் கட்சியின் கீழ் அனுமதிக்கப்படவில்லை.

தலித் உரிமைகளைப் பற்றி மட்டுமே ஆனந்த்பூர் சாஹிப் தீர்மானம் பேசியது. பிரிவினைவாதம் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. ஆனால் அப்போதைய காங்கிரஸ் அதை ஒரு பிரிவினைவாத ஆவணம் என்று முத்திரை குத்தியது. இதைதான், உங்கள் கட்சி செய்தது. உங்கள் கட்சி தான் செய்த தவறுகளை ஏற்றுக்கொள்ளும் முதிர்ச்சி இல்லாதது போல் தெரிகிறது" என கேள்வி எழுப்பினார்.

"அனைத்து தவறுகளுக்கும் பொறுப்பேற்கிறேன்" 

இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, "காங்கிரஸ் கட்சியின் தவறுகளைப் பொறுத்தவரை, அவற்றில் பல நான் இல்லாதபோது நடந்தன. ஆனால், காங்கிரஸ் கட்சி அதன் வரலாற்றில் இதுவரை செய்த தவறுகள் அனைத்திற்கும் நான் மகிழ்ச்சியுடன் பொறுப்பேற்கிறேன். 80களில் நடந்தது தவறு என்று நான் பகிரங்கமாகக் கூறியுள்ளேன். நான் பலமுறை பொற்கோயிலுக்குச் சென்றிருக்கிறேன். இந்தியாவில் உள்ள சீக்கிய சமூகத்துடன் எனக்கு மிகவும் நல்ல உறவு உள்ளது" என்றார்.

கடந்த 1980களில், பஞ்சாபில் ஜர்னைல் சிங் பிந்திரன்வாலே தலைமையில் இயங்கிய பிரிவினைவாத இயக்கத்திற்கு எதிராக இந்திரா காந்தி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது. சீக்கியர்களின் புனிதத் தலங்களில் ஒன்றான அமிர்தசரஸில் உள்ள பொற்கோயிலுக்குள் பதுங்கியிருந்த பிந்தரன்வாலேவை, கோயிலின் வளாகத்திற்குள் சென்று கொன்றது இந்திய ராணுவம். 

சீக்கிய கலவரம் - Anti Sikh Riots

ராணுவ நடவடிக்கையின்போது கோயில் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் சீக்கிய சமூகத்தினருக்கு மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, சில மாதங்களுக்குப் பிறகு, தன்னுடைய சொந்த சீக்கிய பாதுகாப்பு அதிகாரிகளால் இந்திரா காந்தி சுட்டுக் கொல்லப்பட்டார். இவரது படுகொலைக்குப் பின்னர் சீக்கியர்களுக்கு எதிராக பல்வேறு இடங்களில் கலவரம் வெடித்தது. பல காங்கிரஸ் தலைவர்கள் இந்த வன்முறையைத் தூண்டியதாக சந்தேகிக்கப்படுகிறது. டெல்லியிலும் பிற இடங்களிலும் நடந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தில் 3,000 க்கும் மேற்பட்ட சீக்கியர்கள் கொல்லப்பட்டதாக அரசு அறிக்கைகள் கூறுகின்றன.

சீக்கிய கலவரத்தின்போது காங்கிரஸ் அரசின் செயல்பாடுகள் இன்று வரை பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகின்றன. குறிப்பாக, இந்திரா காந்தியின் மகனும் ராகுல் காந்தியின் தந்தையுமான ராஜீவ் காந்தி அப்போது பேசிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. "ஒரு பெரிய மரம் விழும்போது நிலத்தில் அதிர்வுகள் ஏற்படத்தான் செய்யும்" என ராஜீவ் காந்தி கூறினார். சீக்கிய கலவரத்தை முன்வைத்து காங்கிரஸ் கட்சியை பாஜக தொடர்ந்து விமர்சித்து வருகிறது.