சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக, உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டியுள்ளது.
அதானி மீது பரபர குற்றச்சாட்டுகள்:
போலி அறிக்கைகளை வைத்து அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளில் இருந்து அதானி நிதி பெற்றுள்ளார் என்பதே அமெரிக்கா அதானி மீது வைத்துள்ள குற்றச்சாட்டு. இந்த முறைகேடு தொடர்பாக அதானி மீது அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றத்தில் குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதானி குழும பங்குகள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மக்களவை எதிர்க்கட்சி தலைவரும் காங்கிரஸ் எம்.பியுமான ராகுல்காந்தி அதானியையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்தார்.
அதில், ‘ அமெரிக்க சட்டத்தையும், இந்திய சட்டத்தையும் அதானி மீறியிருக்கிறார் என்பதை தற்போது அமெரிக்கா அம்பலப்படுத்தியுள்ளது. பல்வேறு மாநில முதலமைச்சர்களே கைது செய்யப்படும் போது, 2000 கோடி ரூபாய் ஊழல் செய்த அதானி சுதந்திரமாக சுற்றி வருவதை பார்த்தால் ஆச்சரியமாக இருக்கிறது.
இதற்காக நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரணை நடத்தப்பட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி அதானியை பாதுகாத்து வருவதால் அவரை கைது செய்வதற்கு வாய்ப்பில்லை. விசாரணையின் முடிவில் மோடியின் பெயர் வெளிவரும். ஏனென்றால் பாஜகவின் நிதி அமைப்பு முழுவதும் அதானியின் கையில் தான் இருக்கிறது” என விமர்சனங்களை அடுக்கினார் ராகுல்.
சம்பவம் செய்த ராகுல் காந்தி:
செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிக் கொண்டிருக்கும் போதே திடீரென பவர் கட் ஆனது. உடனடியாக இது அதானி பவரா அல்லது மோடி பவரா என அதிரவைத்துள்ளார் ராகுல்காந்தி. எப்படி இருந்தாலும் இரண்டும் ஒன்றுதான் என மோடியையும், அதானியையும் அட்டாக் செய்தார்.
சரியான நேரத்தில் ராகுல்காந்தி கொடுத்த பதிலை சமூக வலைதளங்களில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடி வருகின்றனர். ஆனால், இதை சொல்ல வேண்டும் என்பதற்காகவே ப்ளான் பண்ணி பவர் கட் செய்ததே காங்கிரஸ் தான் என பாஜகவினர் பதிலடி கொடுத்து வருகின்றனர்.