AAP Crack Raghav Chadha: ஆம் ஆத்மி கட்சியில் வகித்து வந்த பொறுப்புகள் பறிக்கபட்டதை தொடர்ந்து, ராகவ் சத்தா பாஜக பக்கம் தஞ்சமடைந்துள்ளார்.

பாஜகவில் ராகவ் சத்தா - AAP ஷாக்

டெல்லியின் முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான, ஆம் ஆத்மி கட்சியின் பிரபல தலைவர்களில் ஒருவரான ராகவ் சத்தா பாஜகவில் இணைவதாக அறிவித்துள்ளர். குறிப்பாக, மாநிலங்களவையில் உள்ள அந்த கட்சியின் பெரும்பாலான உறுப்பினர்களுடன் மத்தியில் ஆளும் கட்சியில் இணைவதாக தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் அவர் வகித்து வந்த பல முக்கிய பதவிகள் பறிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜகவில் இணையும் ராகவ் சத்தாவின் முடிவு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மிகப்பெரிய பின்னடைவாக கூறப்படுகிறது. மாநிலங்களவையில் உள்ள ஆம் ஆத்மி கட்சியின் 10 உறுப்பினர்களில் ஏழு பேர், பாஜகவுடன் இணைவார்கள் என்று செய்தியாளர் சந்திப்பில் ராகவ் அறிவித்தார். ஊழலுக்கு எதிராகப் போராடுவோம் என்ற வாக்குறுதிகளின் பேரில் ஒரு காலத்தில் டெல்லியில் ஆட்சிக்கு வந்த அக்கட்சி, நேர்மையான அரசியலில் இருந்து விலகிச் செல்வதாகவும் குற்றம் சாட்டினார்.

யார் அந்த 6 எம்பிக்கள்:

ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை துணைத்தலைவர் பதவியில் இருந்து சில வாரங்களுக்கு முன்பாக ராகவ் சத்தா நீக்கப்பட்டார். தற்போது அவருடன் சேர்ந்து மேலும் 6 எம்.பிக்கள் பாஜகவில் இணைய உள்ளதாக அறிவித்துள்ளனர். மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாக ராக்வ் சத்தா தெரிவித்து இருந்தார். அந்த பட்டியலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ராஜேந்திர குப்தா, விக்ரம் சஹானி மற்றும் ஸ்வாதி மாலிவால் ஆகியோரும் உள்ளனர். இதுபோக அசோக் மிட்டல், சந்தீப் பதக் ஆகியோரும் ஆம் ஆத்மியிலிருந்து விலகி பாஜகவில் இணைய உள்ளனர்.

கட்சி தாவல் தடை சட்டம் பாயுமா?

ராகவ் சத்தா ஆம் ஆத்மி கட்சியிலிருந்து தனியாக வெளியேறியிருந்தால், உறுப்பினர்கள் தங்கள் கட்சியை விட்டு விலகுவதையோ அல்லது கொறடாவின் உத்தரவை மீறுவதையோ தடைசெய்யும் கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ், அவர் மாநிலங்களவையிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டிருப்பார். ஆனால், அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணையின்படி, ஒரு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு பேர் மற்றொரு கட்சியுடன் இணைவதற்கு ஒப்புக்கொண்டால், தகுதி நீக்கம் பொருந்தாது. ஆம் ஆத்மி கட்சியைப் பொறுத்தவரை, அதன் 10 மாநிலங்களவை எம்.பி.க்களில் ஏழு பேர் கட்சி மாறும் நடவடிக்கையை ஆதரித்துள்ளனர் என ராகவ் சத்தா அறிவித்துள்ளார். இதனால் அவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் செல்லுபடியாகாது என கூறப்படுகிறது. 

ஆம் ஆத்மி கண்டனம்

eம்பிக்களின் வெளியேற்றம் தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவில், “பாஜக மீண்டும் பஞ்சாபியர்களுக்குத் துரோகம் செய்துவிட்டது” என்று கண்டனம் தெரிவித்துள்ளார். பஞ்சாபில் முதலமைச்சர் பகவந்த் மான் அரசு மேற்கொண்டு வரும் மக்கள் நலப் பணிகளைத் தடுப்பதற்காக பாஜக 'ஆபரேஷன் லோட்டஸ்' நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி சாடியுள்ளாது. இதனிடையே, நாடாளுமன்ற உறுப்பினர்களை சமாதானம் செய்யும் முயற்சியிலும் திரைமறைவில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளதாம்.