சமீபத்தில் பஞ்சாபில் ரமேஷ்குமார் என்ற நபர் ரூ. 22.65 லட்சத்துக்கு கறுப்பு குதிரை ஒன்றை வாங்கி உள்ளார், அவர் குதிரையை வீட்டிற்கு அழைத்து வந்து குளிப்பாட்டிய பிறகு, பளபளப்பான கருப்பு மறைந்து சிவப்பு நிறமாக மாறி அதிர்ச்சியை அளித்த சம்பவம் நிகழ்ந்தேறி உள்ளது. 


1990 ஆம் ஆண்டு உலகம் பிறந்தது எனக்காக என்ற படம் வந்தது பலருக்கும் நினைவிருக்க வாய்ப்பில்லை, ஆனால் அதில் வரும் காமெடி அனைவரும் கண்டிருப்போம். கவுண்டமணி தனது தங்கைக்கு சிவப்பு வண்ண பெயிண்ட் அடித்து செந்திலுக்கு திருமணம் செய்து வைப்பார். மிகவும் பிற்போக்கான அந்த காமெடி எல்லாம் இப்போது வந்தால் கலவரமே வெடிக்கும் அளவுக்கு நாம் முன்னேறி வந்துவிட்டாலும், சம்பவங்கள் மாறிய பாடில்லை. ஆனால் குதிரையில் கருப்புக்குதான் மவுசு அதிகம். எனவே கருப்பு பெயிண்ட் அடித்து சிவப்பு குதிரையை விற்றுள்ளனர்.



பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டத்தில் உள்ள சுனம் நகரைச் சேர்ந்த ரமேஷ் குமார் என்பவர், குதிரை வியாபாரிகள் தன்னைக் ஏமாறியதாக கூறினார். சுனம் நகரைச் சேர்ந்த ஜதிந்தர் பால் சிங் செகோன் மற்றும் லக்விந்தர் சிங், லச்ரா கான் என்ற கோகா கான் ஆகியோர் சேர்ந்து கருப்பு குதிரை என்று கூறி ரமேஷை ஏமாற்றி சிவப்பு குதிரையை விற்றுள்ளனர். ரமேஷ் குதிரையை வீட்டிற்கு கொண்டு வந்து குளிப்பாட்டிய பிறகு, பெயின்ட் மறைந்து சிவப்பு நிறம் தெரிந்துள்ளது. ரமேஷ் வியாபாரிகளுக்கு ரூ. 7.6 லட்சம் ரொக்கம் மற்றும் மீதமுள்ள தொகைக்கு இரண்டு காசோலைகளை கொடுத்துள்ளார். மொத்தம் சுமார் ரூ. 23 லட்சம் கொடுத்து அந்த குதிரையை வாங்கி உள்ளார். குற்றவாளிகள் மூவர் மீதும் போலீசார் மோசடி வழக்கு பதிவு செய்துள்ளனர்.



இதற்கிடையில், சங்ரூர் மாவட்டத்தில் குதிரைகள் சம்பந்தப்பட்ட மற்றொரு மோசடி வழக்கு நடந்தது தெரியவந்துள்ளது. ஸ்டட் பண்ணைக்கு குதிரைகளை வாங்கி விற்கும் வியாபாரி வாசு சர்மா, தானும் விற்பனையாளர்களால் ஏமாற்றப்பட்டதாக காவல்துறையிடம் கூறினார். அவரது அறிக்கையின்படி, ஜாடோவைச் சேர்ந்த சுக்செயின் சிங்கிடம் ஒரு மார்வாரி குதிரை இருப்பதாகவும், அட்டாலாவைச் சேர்ந்த ஃபர்மான் சிங்கிடம் ஒரு நுக்ரா(பந்தயக் குதிரை) விற்பனைக்குத் தயாராக இருப்பதாகவும் தரகர்கள் வாசுவிடம் தெரிவித்துள்ளனர். அவர் குதிரைகளைச் சரிபார்த்து, முன்பணம் கொடுத்துள்ளார். மார்வாரி உரிமையாளருக்கு 9 லட்சமும், நுக்ராவுக்கு 15 லட்சமும் கொடுத்துள்ளார். இரண்டு குதிரைகளுக்கும் சேர்த்து 34 லட்சத்து 70 ஆயிரம் ஆன நிலையில், வாசு கடைசியில் மீதமுள்ள 10 லட்சத்து 70 ஆயிரத்தையும் செலுத்தி உள்ளார். ஆனால் அவர் பார்த்த குதிரைப்போலவே இருந்த சாதாரன இந்திய குதிரைகளை டெலிவரி செய்துள்ளனர்.