பொதுமக்கள் நலன் கருதி பஞ்சாபில் செல்போன்களுக்கான இணைய சேவை துண்டிப்பு திங்கட்கிழமை நண்பகல் வரை 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் பதற்றப்பட வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இணைய சேவை துண்டிப்பு:
பஞ்சாப் மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குரல் அழைப்பு தவிர, அனைத்து மொபைல் இணைய சேவைகள், அனைத்து எஸ்எம்எஸ் சேவைகள் (வங்கி மற்றும் மொபைல் ரீசார்ஜ் தவிர) மற்றும் அனைத்து டாங்கிள் (dongle) சேவைகளும் மொபைல் நெட்வொர்க்குகளில் வழங்கப்படும் பிற சேவைகளும் பிராந்திய அதிகார வரம்பில் பொது பாதுகாப்பு நலன் கருதி நாளை நண்பகல் 12:00 மணி நேரம் இடைநிறுத்தப்படும்" தெரிவிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாபில் நடப்பது என்ன?
சீக்கியர்களுக்கு தனி தேசம் உருவாக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலிஸ்தான் இயக்கத்தின் தீவிர ஆதரவாளரான அம்ரித்பால் சிங், தன்னைத் தானே மதபோதகர் என அழைத்து கொள்கிறார். அம்ரித்பாலின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை பஞ்சாப் போலீசார் கைது செய்து அஜ்னாலா பகுதி சிறையில் அடைத்து வைத்துள்ளனர். லவ்பிரீத் சிங்கை விடுவிக்க வலியுறுத்தி, அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் கைகளில் வாள், துப்பாக்கிகளை ஏந்தியவாறு, கடந்த வாரம் அஜ்னாலா காவல்நிலையத்தை முற்றுகையிட்டு சூறையாடி வன்முறையில் ஈடுபட்டனர்.
இதில் காவல்துறை அதிகாரிகள் உள்பட 6 போலீசார் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும், அம்ரித்பாலின் ஆதரவாளர்கள் 6 பேரை பஞ்சாப் போலீசார் நேற்று கைது செய்தனர். இதையடுத்து, அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைகளை போலீசார் தீவிரப்படுத்தினர். ஆனால், அம்ரித்தை கைது செய்தால் கலவரம் ஏற்பட்டு, பஞ்சாப்பில் நடைபெற்று வரும் ஜி20 கூட்டம் பாதிக்கப்படும் என, கைது நடவடிக்கையை தாமதப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
இணையதள சேவை துண்டிப்பு நீட்டிப்பு
இதனிடையே, ஜலந்தரின் ஷாகோட் பகுதிக்கு அம்ரித் செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து, ஆதரவாளர்களின் வாகனங்கள் புடைசூழ சென்று கொண்டிருந்த அம்ரித்பால் சிங்கை, பஞ்சாப் சிறப்பு போலீசார் விரட்டினர். ஆனால், போலீசாரின் பிடியில் சிக்காமல் அம்ரித் தப்பினர். இதையடுத்து அசம்பாவிதங்களை தவிர்க்கும் நோக்கில் மாநிலம் முழுவதும் 18ம் தேதியன்றே இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டது.
மாநிலத்தில் அமைதியை காக்க போலீசார் முழு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், யாரும் பீதியடைய வேண்டாம் எனவும் அரசு கேட்டு கொண்டுள்ளது. இதனிடையே, அம்ரித்தின் ஆதரவாளர்கள் 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதோடு, அம்ரித்தை தேடும் பணியும் மாநிலம் முழுவதும் முடுக்கிவிடப்பட்டு உள்ளது. இந்நிலையில், இன்று நண்பலுடன் முடியவிருந்து இணைய சேவை துண்டிப்பு, நாளை நண்பகல் 12 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.