பெண் சிசு கொலையை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், சில பகுதிகளில் அது தொடர்ந்து வருகிறது. இந்நிலையில், புனேவை சேர்ந்த மருத்துவர், பெண் சுசுவை பாதுகாக்கும் முயற்சியில் தனி ஆளாக குதித்துள்ளார்.
நாடு முழுவதும் பெண் சிசுக்கொலைகளை தடுக்க மக்களை ஊக்குவிக்கும் வகையில், மருத்துவர் கணேஷ் ராக், தனது மருத்துவமனையில் பிறந்த குழந்தை பெண் குழந்தையாக இருந்தால் கட்டணம் வாங்காமல் பிரசவம் பார்த்து வருகிறார்.
இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளது. அதில், புனேவில் உள்ள ஹடப்சர் பகுதியில் மகப்பேறு மற்றும் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையை கணேஷ் நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவரது முயற்சிகள், மத்திய அரசின் 'பேட்டி பச்சாவ்' திட்டத்திற்கு ஏற்ப உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட மருத்துவரின் உன்னத முயற்சியால் இதுவரை 2,400க்கும் மேற்பட்ட பெண் குழந்தைகளை ஒரு பைசா கூட வசூலிக்காமல் பிரசவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் பிறந்த அனைத்து பெண் குழந்தைகளுக்கு மருத்துவமனை ஊழியர்கள், உற்சாக வரவேற்பு அளிக்கின்றனர். ஒவ்வொரு முறையும் ஒரு தாய் தனது மருத்துவமனையில் பெண் குழந்தையைப் பெற்றெடுக்கும் போது, கேக் வெட்டி பெற்றோர்கள் மீது மலர்களை தூவி ஒரு பெரிய கொண்டாட்டத்தை மருத்துவமனை ஏற்பாடு செய்கிறது.
தாய்மார்கள் மற்றும் அவர்களது கைக்குழந்தைகள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவுடன் ஒரு அலங்கரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்ஷாவில் வீட்டிற்குச் செல்ல மருத்துவர் ஏற்பாடு செய்கிறார்கள்.
இதுகுறித்து மருத்துவர் கணேஷ் கூறுகையில், "பெண் குழந்தை பிறந்ததை கேக் வெட்டியும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவதுடன், பெண் குழந்தைகளின் பெற்றோரையும் பாராட்டுகிறோம். 11 ஆண்டுகளில் எங்கள் மருத்துவமனையில் கிட்டத்தட்ட 2,430 பெண் குழந்தைகளைப் பெற்றுள்ளோம். மேலும், எங்கள் மருத்துவமனையில் ஒவ்வொரு பெண் குழந்தை பிறந்ததையும் கொண்டாடுகிறோம்" என்றார்.
பெண் குழந்தையை ஏற்றுக்கொள்ள குடும்பங்கள் தயக்கம் காட்டுவதைப் பார்த்து, அந்த முயற்சியை எப்படித் தொடங்கினார் என்பதையும் மருத்துவர் விரிவாக பேசியுள்ளார்.
"2012க்கு முன், மருத்துவமனையின் ஆரம்ப ஆண்டுகளில், சில சமயங்களில் பெண் குழந்தை பிறந்தால், குடும்ப உறுப்பினர்கள் குழந்தையை பார்க்க வராமல் வெட்கப்படும் விதமான அனுபவங்களை இங்கு சந்தித்தோம். அந்த சம்பவம் என்னைத் தாக்கி, பெண் குழந்தைகளைக் காப்பாற்றவும், பாலின சமத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் ஏதாவது செய்ய வேண்டும் என்று என்னைத் தூண்டியது" என்றார்.