AI Flight Crash: திட்டமிட்டு இன்ஜினை ஆஃப் செய்த பைலட்? 260 பேரை காவு வாங்கிய விமான விபத்து - அதிர்ச்சி ரிப்போர்ட்
Ahmedabad AI Flight Crash: அகமதாபாத்தில் 260 பேரை பலி வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து விமானியால் தான் நேர்ந்ததாக ஆய்வு அறிக்கை தொடர்பான தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Ahmedabad AI Flight Crash: அகமதாபாத்தில் 260 பேரை பலி வாங்கிய ஏர் இந்தியா விமான விபத்து தொழில்நுட்ப கோளாறால் ஏற்படவில்லை என புதிய தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத் விமான விபத்து?
கடந்த ஆண்டு ஜுன் மாதம் 12ம் தேதி அகமதாபாத்தில் ஏர் இந்தியா விமானம் விபத்தில் சிக்கியதில், பயணிகள், பணியாட்கள் உட்பட 260 பேர் உயிரிழந்தனர். ஒட்டுமொத்த நாட்டையே உலுக்கிய இந்த சம்பவத்தை அவ்வளவு எளிதில் யாராலும் கடந்து செல்ல முடியாது. எதிர்பாராத விதமாக ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில் விபத்து தொடர்பான ஆய்வில், இன்ஜினுக்கு எரிபொருள் செலுவதற்கான சுவிட் தொழில்நுட்ப கோளாறால் எதிர்பாராத விதமாக ஆஃப் ஆகவில்லை என்றும், உள்நோக்கத்தோடு வேண்டுமென்றே செய்யப்பட்டுள்ளதாகவும்” கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க ஆய்வாளர்களின் உதவியுடன் இந்த உண்மை கண்டறியப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
விபத்தை ஏற்படுத்திய விமானி?
முன்னதாக கடந்த ஜுலை மாதம் ஏர் இந்தியா நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையில், விமானிகள் இடையே நடந்த உரையாடல் தொடர்பான தகவல்கள் இடம்பெற்று இருந்தன. அதில், ஒருவர் “ஏன் எரிபொருளுக்கான சுவிட்சை ஆஃப் செய்தீர்கள்” என கேட்க, மற்றொருவர் “நான் எதையும் செய்யவில்லை” என பதிலளித்து இருந்தார். இந்நிலையில் Corriere della Sera எனும் இத்தாலி செய்தித்தாளில் வெளியாகியுள்ள தகவலின்படி, “விமானிகளில் ஒருவரே எரிபொருளுக்கான சுவிட்ச்சை ஆஃப் செய்துள்ளார். அதனாலேயே விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த விமானத்தை கேப்டன் சுமீத் சபர்வால் உடன், உதவி விமானியான க்ளைவ் குந்தர் ஆகியோர் சேர்ந்து இயக்கியது குறிப்பிடத்தக்கது.
கேப்டன் சுமீத் சபர்வால் மீது சந்தேகம்
மேலும், “விபத்துக்கு யார் பொறுப்பு என்பது தெளிவாக உறுதியாகாத நிலையில், கேப்டன் சுமீத் சபர்வால் சந்தேகிக்கப்படும் நபர்களின் பட்டியலில் முதல் நபராக உள்ளார். அவர் மன அழுத்த பிரச்னையில் இருந்ததாகவும்” அந்த செய்தி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஏர் இந்தியா நிறுவனத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கையை, கேப்டன் சுமீத்தின் தந்தை நிராகரித்து இருந்தார். தனது மகனின் மன ஆரோக்கியம் குறித்து தவறாக பேசப்படுவதாகவும், மனைவி உடனான விவாகரத்து போன்ற பிரச்னைகளால் பதற்றம் மற்றும் மன அழுத்தத்தில் இருந்ததாக கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் கூறி இருந்தார். ஆனால், ஏர் இந்தியா குறிப்பிட்ட அதே காரணங்களையே, தற்போது அமெரிக்க குழுவும் கண்டறிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அறிக்கை எப்போது வெளியாகும்?
விமான விபத்து நடந்தை தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு தொடங்கி மனித தவறுகள் வரை, விபத்துக்கான காரணம் குறித்து பல கதைகள் பரவ தொடங்கின. பல்வேறு பரிசீலனைகள் மற்றும் ஆய்வுகளுக்குப் பிறகு, காக்பிட்டில் உள்ள கன்ட்ரோல் சுவிட்ச்கள் மீது விசாரணை அதிகாரிகள் முழு கவனத்தை செலுத்தினர். அதன்படி, அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து தொடர்பான இறுதி விசாரணை அறிக்கை தயாராகி வருவதாகவும், விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. அதில், “விமானிகளின் மன ஆரோக்கியத்தை தொடர்ந்து கவனிப்பது, அவர்களது மனநிலையை மேம்படுத்த தேவையான நடவடிக்கைகளை விமான நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும் என்பது போன்ற ஆலோசனைகளும் அறிக்கையில் இடம்பெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
























