வாழ்க்கையில் மாற்றம் ஒன்றுதான் மாறாதது. ஒரு சில நொடிகளில் வாழ்க்கை மாறுதலுக்கு உள்ளாகி, உச்ச நிலை அடைந்தவர்களின் கதைகளை கேட்டிருப்போம். அந்த வகையில், திருமணம் செய்து கொண்ட ஒரு பெண்ணின் வாழ்க்கை தலைகீழாக மாறியிருக்கிறது.
திருமணத்திற்கு பிறகு திருப்பம்:
தனியார் பள்ளி ஆசிரியையான உத்தர பிரதேத்தை சேர்ந்த சனாகானும் என்பவர் திருமணம் ஆகி ஒரு சில வாரங்களிலேயே நகராட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். சனாகானுமுக்கும், மாமூன் ஷாவுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி, திருமணம் நடந்தது. அதற்கு அடுத்த நாளே, அவர் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதலில், ஷாவே அந்தப்பதவிக்கு போட்டியிட விரும்பினார். ஆனால், அது பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் அவரால் போட்டியிட முடியவில்லை. கடந்த 20 ஆண்டுகளாக, சமூக சேவை செய்து வருபவர் மாமூன் ஷா. போலியோவை ஒழித்துக்கட்ட நகரம் முழுவதும் சுற்றி சுழன்றவர். முன்னதாக, காங்கிரஸின் ராம்பூர் நகரத் தலைவராக பதவி வகித்தவர். சமீபத்தில், ஆம் ஆத்மி கட்சியில் இணைந்தார்.
தனது மனைவி நகராட்சி தலைவரானது குறித்து பேசிய மாமூன் ஷா, "திருமணம் செய்து கொள்ளலாம் என ஏப்ரல் 13ம் தேதி முடிவு செய்தோம். ஏப்ரல் 15ஆம் தேதி, திருமணம் நடந்தது. ராம்பூர் நகர் பாலிகா பரிஷத் தலைவர் பதவி பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் திருமணம் நடந்தது" என்றார்.
தனியார் பள்ளி ஆசிரியை நகராட்சி தலைவரான கதை:
தொடர்ந்து பேசிய அவர், "நெருக்கடியான நேரத்தில் மக்களுடன் நின்றதால் உள்ளூர்வாசிகள் என்னை விரும்புகிறார்கள். கடந்த 40 வருடங்களில் அசம்கானுக்கு மட்டுமே வாக்களித்தவர்கள் இம்முறை எங்களுக்கு வாக்களித்தனர். நான்தான் அவர்களுக்கு உதவி செய்தேன் என மக்கள் ஒப்பு கொண்டாலும் அசம்கானுக்கே வாக்களித்து வந்தனர்" என்றார்.
தன்னுடைய திருமணம் குறித்து பேசிய சனா கானும், "திருமணம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்று. திருமணம் நடந்தபோது அது மிகவும் நல்ல மாதம் (ரம்ஜான்). அது முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்டது. திருமணத்திற்குப் பிறகு அந்த சீட் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டதால் தேர்தலில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது.
பிரச்சினைகளுக்கு தீர்வு:
பிரச்சாரத்தின் போது மக்களின் பிரச்சினைகளை மிக அருகில் இருந்து பார்த்தேன். பிரச்னைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காண பாடுபடுவேன். நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றதில் எனது மாணவர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்" என்றார்.
ஆம் ஆத்மி கட்சியின் கானும், 43,121 வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். பாஜக வேட்பாளர் மசரத் முஜீப் 32,173 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தை பிடித்தார். சமாஜ்வாதி கட்சித் தலைவர் அசம்கானின் கோட்டையாகக் கருதப்பட்ட மாவட்டத்தில் சமாஜ்வாதி கட்சி வேட்பாளர் பாத்மா ஜபி 16,273 வாக்குகள் பெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.
ராம்பூரில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மே 4ஆம் தேதி முதல்கட்டமாக நடைபெற்று. மே 13ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன.