அகமதாபாத்தில் இருந்து 10 புதிய வந்தே பாரத் ரயில்கள் மற்றும் பிற ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
அகமதாபாத்தில் 1 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பல வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நாட்டிற்கு அர்ப்பணித்து அடிக்கல் நாட்டினார். இந்த நிகழ்ச்சியில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், குஜராத் ஆளுநர் ஆச்சார்யா தேவ்ரத், முதல்வர் பூபேந்திர படேல், மாநில பாஜக தலைவர் சி.ஆர் பாட்டீல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அகமதாபாத்-மும்பை சென்ட்ரல், செகந்திராபாத்-விசாகப்பட்டினம், மைசூரு-டாக்டர் எம்ஜிஆர் சென்ட்ரல் (சென்னை), பாட்னா-லக்னோ, நியூ ஜல்பைகுரி-பாட்னா, பூரி-விசாகப்பட்டினம், லக்னோ-டெஹ்ராடூன், கலபுராகி-சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா, டெர்மினல் பெங்களூரு, ராஞ்சி-வாரணாசி, கஜுராஹோ-டெல்லி (நிஜாமுதீன்) ஆகிய ரயில்களை அவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் மோடி, ” விக்சித் பாரத் திட்டத்துக்காக சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன, மேலும் பல திட்டங்கள் தொடங்கி வைக்கப்பட்டு, நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் அதற்காக அடிக்கல் நாட்டப்பட்டு வருகிறது. 2024 ஆம் ஆண்டு தொடங்கி 75 நாட்கள் ஆகிவிட்டது. இந்த 75 நாட்களில் ரூ.11 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியுள்ளோம்” என தெரிவித்துள்ளார்.
மேலும், ”ரயில்வே பட்ஜெட்டை பிரித்து மத்திய பட்ஜெட்டில் சேர்த்ததன் காரணமாக ரயில்வே துறையின் மேம்பாட்டிற்கு நிதி ஒதுக்கப்படுகிறது. நான் எனது வாழ்க்கையை ரயில்வே தண்டவாளத்தில் தான் தொடங்கினேன், எனவே முன்பு ரயில்வே துறை எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்குத் தெரியும். சுதந்திரத்துக்குப் பிறகு ஆட்சியில் இருந்தவர்கள், அரசியல் சுயநலத்துக்கு முன்னுரிமை அளித்தனர். இதில் முக்கியமாக பாதிக்கப்பட்டது ரயில்வே துறை தான்” என குறிப்பிட்டார்.
அதனை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், “ இந்தியாவின் வளர்ச்சிக்கான பாதையாக ரயில்வே துறையை பிரதமர் மோடி மாற்றியுள்ளார், அதற்கு இன்றைய நிகழ்வு ஒரு உதாரணம்” என தெரிவித்துள்ளார்.
ரயில்வே உள்கட்டமைப்பு, இணைப்பு மற்றும் பெட்ரோ கெமிக்கல் தொழில்துறைக்கு குறிப்பிடத்தக்க ஊக்கமளிக்கும் வகையில், அகமதாபாத்தில் உள்ள டிஎஃப்சியின் செயல்பாட்டுக் கட்டுப்பாட்டு மையத்தை பிரதமர் பார்வையிட்டார். அதன் பின் ரூ. 1,06,000 கோடி மதிப்பிலான ரயில்வே மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் திட்டங்கள் தொடங்க பிரதமர் மோடி அதற்கான அடிக்கல் நாட்டினார். இவற்றை தவிற 10 புதிய வந்தே பாரத் ரயில்களையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் சென்னை - பெங்களூரு - மைசூரு வரை செல்லும் வந்தே பாரத் ரயில் சேவை தொடங்கி வைக்கப்பட்டது. எனினும் இந்த ரயில் சேவை மார்ச் 14 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.