மன் கி பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, அதிமுக முன்னாள் பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை புகழ்ந்து பேசியுள்ளார். இது அதிமுக தொண்டர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement

பிரதமர் நரேந்திர மோடி 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்றது முதல் ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி வாயிலாக மன் கி மாத் (மக்களின் குரல்) எனப்படும் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார். இப்படியான நிலையில் பிப்ரவரி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று அவர் உரை நிகழ்த்தினார். 

AI உச்சி மாநாடு குறித்து பெருமிதம்

பிரதமர் மோடியின் 131வது எபிசோடில் அவர் தொழில்நுட்பம், சமூக விழிப்புணர்வு மற்றும் இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தின் முன்னேற்றங்கள் பற்றி எடுத்துரைத்தார். சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற ஏஐ தாக்க உச்சி மாநாடு 2026 பற்றி பேசிய அவர், அங்கு நான் உலக தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிர்வாகிகளை சந்தித்தேன். அந்நிகழ்ச்சியில் இந்தியா மூன்று 'மேட் இன் இந்தியா' செயற்கை நுண்ணறிவு மாதிரிகளை அறிமுகப்படுத்தியது என குறிப்பிட்டார். 

Continues below advertisement

எதிர்காலத்தில் உலகம் இந்த ஏஐ சக்தியை எப்படி பயன்படுத்தும் என்பதற்கு இந்த உச்சி மாநாடு ஒரு திருப்புமுனையாகும். இந்த கண்காட்சியில் என்னை இரண்டு விஷயங்கள் கவர்ந்தது. ஒன்று அமுல் அரங்கில் ஏஐ கருவிகள் உதவியுடன் விலங்குகள் சிகிச்சை, கால்நடைகளை பராமரிப்பது, பால் தொடர்பான பணிகள் ஆகியவையாகும். 

இரண்டாவதாக இந்தியாவின் கலாச்சார பாரம்பரியத்தைப் பாதுகாப்பது தொடர்பானது. நமது பண்டைய வேதங்கள்,  கையெழுத்துப் பிரதிகள் எவ்வாறு பாதுகாக்கப்பட்டு இன்றைய தலைமுறைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகின்றன என்பதைக் கண்டு உலகம் முழுவதிலுமிருந்து வந்த தலைவர்கள் ஆச்சரியப்பட்டனர் என தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய அவர்,   ஹோலியின் போது அல்லது பிற பண்டிகைகளின் போது கூட பயன்படுத்தப்படும் பல பொருட்கள் வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டவை நமது சந்தைகளில் நுழைந்துள்ளன. இந்த தயாரிப்புகளை விலக்கி வைக்கவும். உள்ளூர் பொருட்களைத் தேர்வு செய்யவும் எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

ஜெயலலிதாவுக்கு புகழாரம்

இதனையடுத்து ஜெயலலிதா பற்றி பேசிய அவர், “நம் நாட்டில் சமூக நலனுக்காக பாடுபட்டவர்கள், பொதுமக்களுக்கு முன்னுரிமை அளித்தவர்கள் போன்றவர்களுக்கு எப்போதும் மக்களின் இதயங்களில் நிலைத்திருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவின் பிரபலமான தலைவர்களில் ஒருவரான ஜெயலலிதா அம்மாவுக்கு பிப்ரவரி 24 ஆம் தேதி பிறந்தநாள் வருகிறது. நான் தமிழ்நாட்டிற்குச் செல்லும்போதெல்லாம், இன்றும் கூட தமிழக மக்கள் அவர் மீது கொண்டிருந்த ஆழ்ந்த பாசத்தை நான் உணர்கிறேன். ஜெயலலிதாவைப் பற்றிக் குறிப்பிடுவது தமிழக மக்களின் முகங்களில் ஒரு பிரகாசத்தைக் கொண்டுவருகிறது. குஜராத்தில் எனது பதவியேற்பு விழாக்களில் அவர் கலந்து கொண்டார். அவரது சிந்தனை மிகவும் தெளிவாக இருந்தது என குறிப்பிட்டார். 

தமிழக சட்டமன்ற தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக இடம் பெற்றுள்ளது. இந்த நிலையில் விரைவில் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு பரப்புரை மேற்கொள்ள வருகை தரவுள்ள நிலையில் ஜெயலலிதா பற்றிய அவரின் பேச்சு பேசுபொருளாக மாறியுள்ளது.