5 மாநில சட்டசபை தேர்தலின் தொடர்ச்சியாக தெலுங்கானாவில் வருகின்ற நவம்பர் 30ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. தெலுங்கானாவை தவிர பிற நான்கு மாநிலங்களில் கடந்த வெள்ளிக்கிழமை வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. தற்போது தெலுங்கானாவில் அடுத்ததாக சட்டபேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக பிரதமர் மோடி நவம்பர் 25, 26, 27 (இன்று) ஆகிய தேதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்த சுற்றுப்பயணத்திற்கு நடுவே நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை திருமலைக்கு சென்றடைந்தார் பிரதமர் மோடி. நேற்று இரவு மோடி இங்கு தங்கிய பிறகு, இன்று காலை திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோயிலுக்கு (திருப்பதி) சென்று சாமி தரிசனம் செய்தார். இந்த தரிசனத்திற்கு பிறகு பிரதமர் மோடி மீண்டும் தெலுங்கானாவில் பிரச்சாரம் செய்வார் என்று கூறப்படுகிறது. கொரோனா பாதிப்புக்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு பிரதமர் மோடி வருகை தந்தது இதுவே முதல்முறை.
பிரதமர் மோடி வருகை:
திருப்பதி அருகே உள்ள ரேணிகுண்டா விமான நிலையத்தில் பிரதமர் மோடி நேற்று இரவு 7.40 மணிக்கு தரையிறங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விமான நிலையத்தில் பிரதமர் மோடியை ஆந்திர ஆளுநர் அப்துல் நசீர், முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி ஆகியோர் வரவேற்றனர்.
நான்காவது முறையாக திருப்பதிக்கு வருகை தந்த பிரதமர் மோடி:
பிரதமராக நரேந்திர மோடி நான்காவது முறையாக திருப்பதி ஏழுமலையானை இன்று தரிசித்தார். இதற்கு முன்னதாக, கடந்த 2014ம் ஆண்டு பிரதமராக பொறுப்பேற்ற மோடி, 2015, 2017 மற்றும் 2019ம் ஆண்டுகளில் திருப்பதிக்கு வருகை தந்துள்ளார். கொரோனா காலத்திற்கு பிறகு திருப்பதிக்கு பிரதமர் மோடி வருவது இதுவே முதல்முறை.
பிரதமர் மோடியின் பயண திட்டம்:
ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மாலை 6.50 மணிக்கு சிறப்பு விமானம் மூலம் திருப்பதி விமான நிலையத்துக்கு பிரதமர் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை வழியாக இரவு 7:50 மணிக்கு மலையை சென்றடைந்து திருமலை விருந்தினர் மாளிகையில் தங்கினார். தொடர்ந்து இன்று காலை 7:55 மணிக்கு கோவிலை அடைந்து மகாத்வார் வழியாக நுழைந்து, காலை 8.05 மணிக்கு சுவாமி தரிசனம் செய்த பிரதமர், 8.45 மணி வரை கோயிலில் தங்கினார். தரிசனம் முடிந்ததும் வேத பண்டிதர்களின் ஆசி மற்றும் பிரசாதம் பெற்று, அதன் பிறகு 8:55க்கு வெளியேறினார். அங்கிருந்து நேரடியாக விருந்தினர் மாளிகைக்குத் திரும்பி சிறிது நேரம் ஓய்வெடுக்கும் அவர், பின்னர் காலை 9:30 மணிக்கு திருமலையில் இருந்து புறப்பட்டு திருப்பதி விமான நிலையம் வந்து சிறப்பு விமானம் மூலம் ஹைதராபாத் புறப்பட்டு செல்கிறார்கள்.
பாதுகாப்பு நடவடிக்கைகள்:
பிரதமர் மோடி தங்கியிருக்கும் விருந்தினர் மாளிகைகளை சுற்றி ஏற்கனவே என்எஸ்ஜி படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளன. இதில் ஸ்ரீரச்சனா விருந்தினர் மாளிகையும் அடங்கும். மேலும் பிரதமர் பயணிக்கும் பாதைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. முன்னதாக, கடந்த சனிக்கிழமையன்று திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் (TTD) நிர்வாக அதிகாரி தர்ம ரெட்டி, திருப்பதி எஸ்பி பரமேஷ்வர் ரெட்டி, மத்தியப் படை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கோயில் மற்றும் பிற இடங்களில் ஆய்வு செய்தனர்.