இன்றைய மனதின் குரல் நிகழ்ச்சியில் சுதந்திர போர் குறித்தும், கேரளத்து பழங்குடியினரின் குடை குறித்தும், அன்னையின் அன்பு குறித்தும் மற்றும் சமஸ்கிருத மொழி குறித்தும் உரையாற்றினார். 


மீண்டும் வந்திருக்கிறேன்:


தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் சந்திக்கிறேன் என்று ஃபிப்ரவரி மாதம் உங்களிடம் கூறியிருந்தேன், இன்று மனதின் குரலோடு உங்களிடையே மீண்டும் வந்திருக்கிறேன் என பிரதமர் மோடி தனது உரையை தொடங்கினார்


மனதின் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி, சில மாதங்களுக்கு என்னமோ தடைப்பட்டிருக்கலாம் ஆனால், மனதின் குரலில் ஏற்படுத்திய உணர்வினால், தேசத்தில், சமூகத்தில், ஒவ்வொரு நாளும் நல்ல பணிகள், சுயநலமற்ற உணர்வோடு புரியப்படும் பணிகள், சமூகத்தில் நல்ல ஆக்கப்பூர்வமான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 


நண்பர்களே, நமது அரசியலமைப்புச்சட்டம் மற்றும் தேசத்தின் ஜனநாயக அமைப்புகள் மீது தங்களுடைய அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் நிரூபித்திருக்கும் நமது நாட்டுமக்களுக்கு நான் என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.   2024ஆம் ஆண்டின் தேர்தல், உலகின் மிகப்பெரிய தேர்தலாகும்.  உலகின் எந்த ஒரு தேசத்திலும், இத்தனை பெரிய தேர்தல் இதுவரை எப்போதும் நடந்ததில்லை.  இதிலே 65 கோடி மக்கள் வாக்களித்தார்கள்.  நான் தேர்தல் ஆணையத்திற்கும், வாக்களிப்பு முறையோடு தொடர்புடைய அனைத்து பேருக்கும், இந்தக் காரணத்திற்காக பாராட்டுக்களைத் தெரிவிக்கிறேன்.




சுதந்திர போர்:


இன்று ஜூன் மாதம் 30ஆம் தேதி, மிகவும் மகத்துவம் வாய்ந்ததாகும்.  இந்த நாளைத் தான் நமது பழங்குடியின சகோதர சகோதரிகள், ஹூல் தினம் என்ற வகையிலே கொண்டாடுகிறார்கள்.  இந்த நாள், வீரர்களான சித்தோ-கான்ஹூவின் அசாத்தியமான சாகசத்தோடு தொடர்புடையது.  இவர்கள் அந்நிய ஆட்சியாளர்களின் கொடுமைகளை வலிமையாக எதிர்த்தார்கள். 


வீரர்கள் சித்தோ-கான்ஹூ, ஆயிரக்கணக்கான சந்தாலி சகாக்களை ஒன்றிணைத்து, ஆங்கிலேயர்களுக்கு எதிரான தீவிரமான போராட்டத்தை மேற்கொண்டார்கள், இது எப்போது என்று உங்களுக்குத் தெரியுமா?  இது 1855ஆம் ஆண்டு நடந்தது, அதாவது 1857 பாரதத்தின் முதல் சுதந்திரப் போருக்கு, ஈராண்டுகள் முன்னமேயே நடந்தது.  அப்போது ஜார்க்கண்டின் சந்தால் பர்கனாவிலே, நம்முடைய பழங்குடி சகோதர சகோதரிகள், அந்நிய ஆட்சியாளர்களுக்கு எதிராக, ஆயுதமேந்திய போராட்டத்தைத் துவக்கினார்கள்.  நம்முடைய சந்தாலி பழங்குடியின சகோதர சகோதரிகளின் மீது ஆங்கிலேயர்கள் பலவகையான கொடுமைகளைப் புரிந்தார்கள், அவர்கள் மீது பலவிதமான கட்டுப்பாடுகளையும் விதித்திருந்தார்கள். இந்தப் போராட்டத்தில் அற்புதமான வீரத்தை வெளிப்படுத்திய வீரர்களான சித்தோவும் கான்ஹூவும் பலியாகினார்கள். இவர்களது தியாகம், இன்று நமக்கு உத்வேகமளிக்கிறது.


அன்னை- இயக்கம்:


உலகின் மிகவும் விலைமதிப்பில்லாத உறவு எது என்று நான் உங்களிடம் வினவினால், நீங்கள் கண்டிப்பாக அம்மா என்றே கூறுவீர்கள்.  நம்மனைவரின் வாழ்க்கையிலும் அம்மாவுக்கான இடம் மிகவும் உயர்வானதாகவே இருக்கும்.   அம்மா அனைத்து துக்கங்களையும் சகித்துக் கொண்டு, தனது மக்களை நன்கு வளர்க்கிறார்.  நம் ஒவ்வொருவரையும் பெற்ற அன்னையின் அன்பு, நம் அனைவரின் மீதும், நாம் என்றுமே திருப்பிச் செலுத்த முடியாத ஒரு கடனைப் போன்றது.  நாம் நமது அன்னையர்க்கு ஏதாவது திரும்பச் செலுத்த முடியுமா என்று நான் எண்ணிப் பார்க்கிறேன். ஆனால், ஏதாவது செய்ய முடியுமா சொல்லுங்கள்?  


இந்த எண்ணத்தால் உந்தப்பட்டுத் தான் நான் இந்த ஆண்டு உலக சுற்றுலா தினத்தன்று ஒரு சிறப்பான இயக்கத்தை ஆரம்பித்தேன், இந்த இயக்கத்தின் பெயர் – ஒரு மரம் அன்னையின் பெயரில்.  நானும் கூட என் அன்னையின் பெயரிலே ஒரு மரத்தை நட்டிருக்கிறேன்.  நமது அன்னையரோடு இணைந்து அல்லது அவர்களின் பெயரில் ஒரு மரத்தைக் கண்டிப்பாக நடுங்கள் என்று நாட்டு மக்கள் அனைவரிடத்திலும், உலகின் அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களிடத்திலும் நான் வேண்டுகோள் விடுத்தேன்.   அன்னையின் நினைவாக, அவருக்கு மரியாதை அளிக்கும் விதமாக, இந்த மரம் நடும் இயக்கம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதைக் காணும் போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது.


கேரளம் -கார்த்தும்பிக் குடை


இந்த மழைக்காலத்தில், அனைவரின் வீடுகளிலும் தேடப்படும் ஒரு பொருள் என்றால் அது குடை.  மனதின் குரலில் இன்று ஒரு விசேஷமான குடைகளைப் பற்றிய தகவலை நான் உங்களுடன் பகிர இருக்கிறேன்.  இந்தக் குடை நமது கேரளத்திலே தயார் செய்யப்படுகிறது.   பார்க்கப்போனால், கேரளத்தின் கலாச்சாரத்திலே குடைகளுக்கென ஒரு விசேஷ மகத்துவமுண்டு.  குடைகள் என்பவை அங்கே பல பாரம்பரியங்கள் மற்றும் விதிகள்-பழக்கங்களில் முக்கியமான பங்காற்றுகின்றன. 


ஆனால் நான் எந்தக் குடை பற்றிப் பேசுகிறேன் என்றால், அது கார்த்தும்பிக் குடை, இவை கேரளத்தின் அட்டப்பாடியிலே தயாரிக்கப்படுகின்றன.  இந்த வண்ணமயமான குடைகள் மிகவும் அருமையாக இருக்கின்றன.  இவற்றின் விசேஷம் என்னவென்றால், இவை கேரளத்தின் நமது பழங்குடியின சகோதர சகோதரிகளால் தயாரிக்கப்படுகிறது என்பது தான்.  இன்று நாடெங்கிலும் இந்தக் குடைகளின் தேவை அதிகரித்து வருகிறது.  இவை இணையம்வழியும் விற்பனை செய்யப்படுகின்றன.  இந்தக் குடைகளை வட்டாலக்கி கூட்டுறவு வேளாண் அமைப்பின் மேற்பார்வையில் தயாரிக்கிறார்கள்.  இந்த அமைப்பின் தலைமை, நமது பெண்களிடம் தான் இருக்கிறது. 




சமஸ்கிருதம்:


 நாம் சமஸ்கிருதத்துக்கு மதிப்பளிப்பதோடு, நமது அன்றாட வாழ்க்கையிலும் இதை இணைத்துக் கொள்ள வேண்டும்.   தற்போது இப்படிப்பட்ட ஒரு முயற்சி பெங்களூரூவில் பலர் செய்து வருகிறார்கள்.  பெங்களூரூவின் ஒரு பூங்காவான கப்பன் பூங்காவில் இங்கிருப்போர் ஒரு புதிய பாரம்பரியத்தைத் தொடங்கியிருக்கிறார்கள்.  இங்கே வாரத்தில் ஒரு முறை, ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையன்றும், குழந்தைகள், இளைஞர்கள், பெரியோர் என அனைவரும் பரஸ்பரம் சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார்கள்.  இது மட்டுமல்ல, இங்கே வாதவிவாதங்களின் பல அமர்வுகளும் சமஸ்கிருதத்திலேயே ஏற்பாடு செய்யப்படுகின்றன. 


சில நாட்கள் முன்பாகத் தொடங்கப்பட்ட இந்த முயற்சி பெங்களூரூவாசிகளின் மத்தியிலே, சில நாட்களிலேயே மிகவும் பிரபலமானதாகிவிட்டது.  நாமனைவரும் இதைப் போன்ற முயற்சிகளில் இணைந்தோம் என்றால், உலகின் இத்தனை தொன்மையான, அறிவியல் செறிவுடைய மொழியின் வாயிலாகப் பலவற்றைக் கற்றுக் கொள்ள முடியும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.