உத்தரகண்டின் உத்தரகாசியில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதையின் ஒரு பகுதி, கடந்த 12ம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து இடிந்து விழுந்தது. இதனால், உள்ளே பணியாற்றிக் கொண்டிருந்த 41 தொழிலாளர்கள், இடிபாடுகளுக்கு உள்ளே சிக்கினர். இதையடுத்து அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் களமிறங்கினர்.
பல சவால்களுக்கு மத்தியில் தொடர் முயற்சியின் பலனாக 17ஆவது நாளான இன்று சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் சிக்கி வெளியே வந்த தொழிலாளர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு வருகின்றனர்.
"நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன்"
இந்த நிலையில், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்கள் மீட்கப்பட்டது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, மீட்புக்குழுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரகண்ட் மாநிலத்தில் சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த தொழிலாளர்கள் அனைவரும் மீட்கப்பட்டதை அறிந்து நான் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்கிறேன். மீட்பு படையினரின் முயற்சிகளில் தடை ஏற்பட்ட போதிலும், கடந்த 17 நாள்களாக பல கடினங்களை எதிர்கொண்டு வெற்றி கண்டு இருப்பது அவர்களின் மன தைரியத்துக்கான சான்று.
அவர்களின் மன உறுதிக்கு தேசம் தலை வணங்குகிறது. வீடுகளை தாண்டி, பெரும் ஆபத்தில் கூட நாட்டின் முக்கியமான உள்கட்டமைப்பைக் கட்டியமைத்ததற்காக அவர்களுக்கு நன்றியுடன் உள்ளோம். வரலாற்றில் மிகவும் கடினமான மீட்புப் பணிகளில் ஒன்றைச் செய்து, நம்பமுடியாத மன உறுதியுடனும் பணியாற்றிய மீட்பு படையினர் மற்றும் அனைத்து நிபுணர்களையும் நான் வாழ்த்துகிறேன்" என்றார்.
"மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு முயற்சிகள் சாதகமான பலனைத் தந்துள்ளன"
மீட்பு படையினருக்கு பாராட்டு தெரிவித்த மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, "சில்கியாரா சுரங்கப்பாதையில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்கள் வெற்றிகரமாக மீட்கப்பட்டதால் நான் முற்றிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்துள்ளேன்.
இது பல அமைப்புகளால் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட முயற்சியாகும். இது சமீபத்திய ஆண்டுகளில் மிக முக்கியமான மீட்பு நடவடிக்கைகளில் ஒன்றாகும். பல்வேறு சவால்களை எதிர்கொண்ட போதிலும் பல்வேறு துறைகளும் முகமைகளும் இணைந்து செயல்பட்டுள்ளன. அனைவரின் அயராத மற்றும் நேர்மையான முயற்சிகள், அனைவரின் பிரார்த்தனைகளும் இணைந்து இந்த மீட்பு பணியை சாத்தியமாக்கியுள்ளன. மீட்புக் குழுவினரின் அர்ப்பணிப்பு முயற்சிகள் சாதகமான பலனைத் தந்துள்ளன" என குறிப்பிட்டுள்ளார்.