தெலங்கானா மாநிலத்தின் முதல் முதலமைச்சர் சந்திரசேகர் ராவ். அந்த மாநிலம் உருவாகியது முதல் கடந்த 2023ம் ஆண்டு முதல் மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பு வகித்தார். இவரது தெலங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியை இவர் பாரத் ராஷ்ட்ரிய சமிதி கட்சியாக மாற்றியது முதலே கட்சிக்குள்ளும், குடும்பத்திலும் மோதல் வெடிக்கத் தொடங்கியது. 

Continues below advertisement

புது கட்சி தொடங்குகிறாரா சந்திரசேகர் ராவ் மகள்?

கடந்தாண்டு பிஆர்எஸ் கட்சியின் புதிய தலைமை யார்? என்பதில் சந்திரசேகர் ராவ் மகன் கேடி ராமாராவிற்கும், மகள் கவிதாவிற்கும் மோதல் வலுத்தது. கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் மீது தொடர்ந்து கவிதா விமர்சனத்தை முன்வைத்து வந்த நிலையில், அவரை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்வதாக சந்திரசேகர் ராவ் உத்தரவு பிறப்பித்தார். 

அதன்பின்பு, கவிதா - கேடி ராமாராவ் மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த நிலையில், கவிதா புதிய கட்சி தொடங்க ஆலோசித்து வருவதாக தொடர்ந்து தகவல் வெளியாகி வந்தது. இன்னும் 3 ஆண்டுகளில் தெலங்கானாவில் மீண்டும் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கட்சியை தொடங்கினால் தேர்தலைச் சந்திக்க அது பயனுள்ளதாக இருக்கும் என்று கவிதா திட்டமிட்டுள்ளார். 

Continues below advertisement

பிரசாந்த் கிஷோருடன் சந்திப்பு:

இதற்காக, பிரபல அரசியல் வியூக நிபுணர் பிரசாந்த கிஷோரை கவிதா சந்தித்துள்ளார். இவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே இதுதொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், சங்கராந்தி பண்டிகையின்போது 5 நாட்களுக்கும் மேலாக பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாக  தகவல் கிடைத்துள்ளது. 

இந்த சந்திப்பில், தெலங்கானா மக்களின் நலன் கருதி புதிய கட்சியை தொடங்குவது குறித்து கவிதா கருத்துக்களை பகிர்ந்து கொண்ட நிலையில், கட்சி எவ்வாறு செயல்பட வேண்டும்? கட்சியின் கட்டமைப்பு, கட்சியை அடிமட்ட மக்கள் மத்தியில் எப்படி கொண்டு செல்ல வேண்டும்? தொலைநோக்குப் பார்வை குறித்து இருவரும் தீவிரமாக ஆலோசித்தனர்.

50 குழுக்கள்:

கட்சி தொடங்குவதற்கான முன்னேற்பாடுகளாக 50 குழுக்களை ஏற்கனவே கவிதா உருவாக்கியுள்ளார். இந்த குழுக்கள் கட்சியின் அடிப்படை கொள்கைகளை வகுப்பது, மக்களின் தேவைகள் மற்றும் 2028ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் ஆகியவற்றை மையப்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்த குழுக்களை விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளவும் கவிதா உத்தரவிட்டுள்ளார். 

கவிதா தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சியில் அரசியல் நிபுணரும், ஜன்சுராஜ் கட்சியின் தலைவருமான பிரசாந்த் கிஷோர் ஆலோசகராக முக்கிய பங்கு வகிப்பார் என்று கருதப்படுகிறது. கவிதா கட்சி தொடங்குவது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகாவிட்டாலும், அவர் கட்சி தொடங்கினால் 2028  தெலங்கானா சட்டமன்ற தேர்தலில் அவரின் தேர்தல் வியூக வகுப்பாளராக பிரசாந்த் கிஷோர் இருப்பார் என்று கருதப்படுகிறது. 

கவிதா தொடங்க உள்ள புதிய அரசியல் கட்சி 47 வயதே ஆன அவரின் எதிர்கால அரசியல் பயணத்தை செழிப்பாக தீர்மானிக்கும் வகையில் உருவாக்க வேண்டும் என்பதற்காக அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார்.