பயங்கரவாத தாக்குதல்:
கடந்த சனிக்கிழமை ஜம்மு காஷ்மீர் பூஞ்ச் மாவட்டம் சூரன்கோட் பகுதியில், இந்திய பாதுகாப்பு படையினரின் வாகனமானது, இந்திய விமானப்படை தளத்திற்கு செல்லும்போது, பயங்கரவாதிகள் கடும் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில், இந்திய விமானப்படையின் வாகனம் உட்பட இரண்டு வாகனங்கள் சேதம் அடைந்தன.
அதோடு, இந்திய விமான படையைச் சேர்ந்த 5 வீரர்கள் காயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியானது. இதையடுத்து காயமடைந்த பாதுகாப்பு வீரர்களுக்கு சிகிச்ச அளிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு பாதுகாப்பு வீரர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இதையடுத்து, அப்பகுதியைக் கட்டுக்குள் கொண்டு வந்த இந்திய ராணுவம், பயங்கரவாதிகள் குறித்து தீவிர தேடுதலில் இறங்கியது.
உணவு அளித்தவர் கைது:
இந்நிலையில், பூஞ்ச் தீவிரவாத தாக்குதல் தொடர்பாக 6 பேரை இந்திய பாதுகாப்பு படையினர் (ஞாயிற்றுக்கிழமை) இன்று கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் முகமது ரசாக் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் பயங்கரவாதிகளுக்கு உணவு மற்றும் தளவாட உதவிகளை வழங்கியதாக கூறப்படுகிறது.
இரங்கல் தெரிவிப்பு:
இந்திய விமான படையின் கான்வாய் மீது பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டுள்ள நிலையில், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு படையினர் தடுப்புகளை அமைத்து சோதனை நடத்தி வருகின்றனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து இந்திய விமான படை தெரிவித்ததாவது, பூஞ்ச் பகுதியில் தேசத்தின் சேவைக்காக உயிர் தியாகத்தை செய்த துணிச்சலான விக்கி பஹடேவுக்கு வணக்கம் செலுத்துகிறோம் என தெரிவித்துள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களையும், இந்த துக்க நேரத்தில் நாங்கள் உங்கள் பக்கம் உறுதியாக நிற்கிறோம் எனவும் தெரிவித்துள்ளது.