திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள காந்தி கிராம பல்கலைகழகத்தில் நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி, ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் இன்று பங்கேற்றனர்.
தமிழ்நாடு அரசுக்கும் ஆளுநருக்கும் அதிகார போட்டி நிலவிவரும் நிலையில், கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும் என ஆளுநர் ரவி முன்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார்.
இதை தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, வணக்கம் என தனது உரையை தொடங்கினார். கதர் துறை, கிராம வளர்ச்சி, தமிழர்கள், இளைஞர்கள் உள்ளிட்டவை குறித்து பேசினார்.
இது தொடர்பாக விரிவாக பேசிய அவர், "இன்று பட்டம் பெற்றுள்ள இளைய சமுதாயத்திற்கு வாழ்த்துகள். இந்த பட்டமளிப்பு விழாவிற்கு வந்ததால் நான் ஊக்கம் பெற்றுள்ளேன். நீங்கள் அனைவரும் முக்கியமான கட்டத்தில் பட்டம் பெற்றுள்ளனர். காந்திகிராமத்தை திறந்து வைத்தவர் அண்ணல் காந்தியடிகள்.
காந்திய விழுமியங்கள் இன்றைய சூழலில் பொருத்தமானதாகி வருகிறது. இது மோதல்களை முடிவுக்குக் கொண்டுவருவதிலும் காலநிலை நெருக்கடியை முடிவுக்கு கொண்டு வருவதிலும் உதவுகிறது. மகாத்மா காந்தியின் கருத்துக்கள் இன்றைய பல சவால்களுக்கு தீர்வுகளை கொடுத்துள்ளன.
காந்தியின் குறிக்கோள் கிராமப்புற வளர்ச்சிதான். நீண்ட காலத்திற்கு கதர் புறக்கப்பட்டுள்ளது. ஆனால், தற்போது அது சர்வதேச ஆடையாக மாறிவிட்டது. கடந்த 8 ஆண்டுகாலமாக, கதர் விற்பனை 300 சதவிகிதம் உயர்ந்துள்ளது.
கிராமங்களின் வளர்ச்சிக்காக பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கிராமம், நகரம் என்ற வேறுபாடு இல்லாத அளவுக்கு வளர்ச்சியை எட்டியுள்ளோம். கிராமத்தின் ஆன்மா நகரத்தின் வசதி. இன்னும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது. இயற்கை விவசாயத்தில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். கிராமங்களின் வளர்ச்சிக்காக இளைஞர்கள் உழைக்க வேண்டும்.
இயற்கை விவசாயம் நாட்டின் உர தேவையை குறைக்கும். சுதேச இயக்கத்தின் மையமாக இருந்தது தமிழ்நாடு. சங்க காலத்திலேயே தமிழர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவு குறித்த விழ்ப்புணர்வுடன் இருந்திருக்கின்றனர்.
பெண்களின் வளர்ச்சிதான் நாட்டின் வளர்ச்சி. கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக போரிட்ட முதல் மகாராணி வேலு நாச்சியார் ஆவார். பெண் சக்தியில் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டின் மொழி, கலாசாரத்தைக் கொண்டாட காசி தயாராக இருக்கிறது. தேச ஒற்றுமையில் இளைஞர்கள் கவனம் செலுத்த வேண்டும். அவர்களின் கையில்தான் இந்தியா உள்ளது" என்றார்.