போரின் தீவிரத்தைக் குறைத்தல், பேச்சுவார்த்தை, ராஜதந்திரம் ஆகியவைதான் பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கான வழிகள் என்பதை ஈரான் அதிபர் மசூத் பெஷேஷ்கியனுடன் பிரதமர் மோடி மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
ஈரான் அதிபருக்கு போன் போட்ட பிரதமர் மோடி:
ஈரான் - இஸ்ரேல் நாடுகளுக்கு இடையேயான மோதல் தீவிரம் அடைந்துள்ள நிலையில், பிராந்தியத்தில் நிலவும் சூழ்நிலை குறித்து, ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷேஷ்கியன் உடன் பிரதமர் நரேந்திர மோடி இன்று (22.06.2025) விரிவான உரையாடலை நடத்தினார்.
இந்த பேச்சுவார்த்தையின்போது, சமீபத்திய பதற்றங்கள் குறித்து பிரதமர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார். பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திரத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய நரேந்திர மோடி, நீண்டகால பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதற்கு போரின் தீவிரத்தை குறைப்பது அவசியம் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.
ஒரே கவலையா இருக்கு!
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், "ஈரான் அதிபர் டாக்டர் மசூத் பெஷஷ்கியனுடன் பேசினேன். தற்போதைய நிலைமை குறித்து விரிவாக விவாதித்தோம். சமீபத்திய மோதல்கள் குறித்து ஆழ்ந்த கவலையை வெளிப்படுத்தினேன்.
பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை விரைவாக மீட்டெடுப்பதற்கும், நிலைமையில் முன்னேற்றத்தை ஏற்படுத்தவும், உடனடியாக போரின் தீவிரத்தைக் குறைத்து, பேச்சுவார்த்தை மற்றும் ராஜதந்திர ரீதியிலான தீர்வுக்கான அழைப்பை மீண்டும் வலியுறுத்தினேன்" என குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையேயான போர் எந்த நேரத்திலும் போராக வெடிக்கும் சூழல் நிலவுகிறது. இந்நிலையில் தான், ஈரானின் 3 அணு ஆய்வு மையங்கள் மீது அமெரிக்கா இன்று காலை வான்வெளி தாக்குதல் நடத்தியது.
இஸ்ரேலின் வான்வழி தாக்குதலில் நாங்களும் கலந்துகொண்டுள்ளதாகவும், ஈரான் போர் நிறுத்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் ட்ரம்ப் எச்சரித்தார். அமெரிக்காவின் தாக்குதலுக்கு தக்க பதிலடி அளிக்கப்படும் என ஈரான் எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
