பாலஸ்தீன பகுதியான காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் போர் உலகளவில் அதிர்வலைகளை கிளப்பி வருகிறது. பாலஸ்தீனத்தை சேர்ந்த ஹமாஸ் அமைப்பு தாக்குதலை தொடங்கியிருந்தாலும், பதில் தாக்குதல் நடத்துகிறோம் என்ற பெயரில் இஸ்ரேல் பாதுகாப்பு படைகள், வடக்கு காசாவை நிலைகுலைய வைத்தது. இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை கிட்டத்தட்ட 20,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 


அதிர்வலைகளை கிளப்பி வரும் இஸ்ரேல் போர்:


இஸ்ரேல் ராணுவத்தால் கொல்லப்பட்டவர்களில் பெரும்பான்மையானவர்கள் குழந்தைகளும் பெண்களுமே ஆவர். சர்வதேச அழுத்தம் காரணமாக தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. கடந்த நவம்பர் 24ஆம் தேதி தொடங்கிய தற்காலிக போர் நிறுத்தம் இரண்டு முறை நீட்டிக்கப்பட்டு, ஏழு நாள்கள் தொடர்ந்தது. 


தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி, இரு தரப்பிலும் பிடிக்கப்பட்ட கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் பிடித்து வைத்த பணயக்கைதிகளும் இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீன கைதிகளும் விடுவிக்கப்பட்டனர். போர் நிறுத்தம் முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தெற்கு காசா மீது தனது கவனத்தை திருப்பியுள்ளது இஸ்ரேல் ராணுவம். அங்கு தாக்குதல் நடத்தி வருகிறது.


இந்த விவகாரத்தில் இந்தியா எடுத்துள்ள நிலைபாடு முக்கியத்துவம் பெறுகிறது. ஹமாஸ் தாக்குதலை கண்டித்துள்ள அதே நேரத்தில், இரு நாட்டு கொள்கையில் உறுதியுடன் இருப்பதாக பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸிடம் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.


"மனிதாபிமான உதவிகள் தொடர்ந்து அளிக்கப்படும்"


இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை மீண்டும் தொடர்பு கொண்டு பேசியுள்ளார் பிரதமர் மோடி. ஆக்கப்பூர்வமான கருத்துகளை பகிர்ந்து கொண்டதாக அவர் கூறியுள்ளார். இதுகுறித்து எக்ஸ் வலைதள பக்கத்தில் அவர் வெளியிட்ட பதிவில், "நடந்து வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் குறித்து பிரதமருடன் ஆக்கப்பூர்வமான கருத்துப் பரிமாற்றம் நடந்தது.


கடல்வழி போக்குவரத்தின் பாதுகாப்பு குறித்த கவலை தெரிவித்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தொடர்ந்து மனிதாபிமான உதவி அளிக்கப்படும். பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை சீக்கிரமாக மீட்டெடுப்பதற்கு ஆதரவாக இந்தியாவின் நிலையான நிலைப்பாட்டை எடுத்துரைத்தேன்" என்றார்.


 






காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் கோரும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானத்திற்கு ஆதரவாக இந்தியா கடந்த வாரம் வாக்களித்தது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் அவசரகால சிறப்பு அமர்வில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தீர்மானத்துக்கு ஆதரவாக 153 நாடுகளும் எதிராக 10 நாடுகளும் வாக்களித்தன. தீர்மானத்தில் வாக்களிக்காமல் 23 நாடுகள் புறக்கணித்தன.