நாட்டின் வளர்ச்சிக்காக பாடுபடும் எனக்கு எதிர்க்கட்சிகள் சாவக்குழிகள் தோண்ட பார்க்கிறார்கள் என பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் கடுமையான குற்றச்சாட்டை எடுத்து வைத்தார்.
நன்றி தெரிவிக்கும் தீர்மானம்:
நாடளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் மோடி நேற்று மக்களவையில் உரையாற்ற இருந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளி காரணமாக நேற்று அவையானது ஒத்திவைக்கப்பட்டது. பிரதமர் இல்லாமலே இந்த தீர்மானமானது நிறைவேற்றப்பட்டது.
ராகுல் மற்றும் காங்கிரஸை சாடிய பிரதமர்:
எதிர்க்கட்சி எம்பிக்கள் கேள்விகளுக்கு பயந்து மக்களவைக்கு பிரதமர் வரவில்லை என புகார் எழுந்த நிலையில் மாநிலங்களவைக்கு இன்று வருகை தந்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது நேற்று, காங்கிரஸ் இளவரசர்(ராகுல் காந்தி) இந்த அவையின் ஒரு எம்.பி.யை துரோகி என்று அழைத்தார். கற்பனை செய்து பாருங்கள், அவரது ஆணவம் ஏழாவது வானத்தை எட்டியுள்ளது. அவர் ரவ்னீத் பிட்டுவை ஒரு சீக்கியர் என்பதால் துரோகி என்று அழைத்தார். இது சீக்கியர்களுக்கு, குருக்களுக்கு ஒரு அவமானம். சீக்கியர்கள் மீது காங்கிரஸ் கட்சிக்குள் நிலவும் ஆழ்ந்த வெறுப்பின் வெளிப்பாடாகும்" என்று அவர் கூறினார். அசாம் மக்கள் மீது காங்கிரஸ் கட்சி ஆழ்ந்த வெறுப்பைக் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்
எனக்கு கல்லறை தோண்ட பார்க்கிறார்கள்:
"காங்கிரஸ் ஒருபோதும் ஸ்டார்ட்அப் கலாச்சாரத்தை ஊக்குவித்ததில்லை. அவர்களுடைய நிலை அவர்களால் சொந்த ஸ்டார்ட்அப்களை கூட சரிசெய்ய முடியாத அளவுக்கு உள்ளது. காங்கிரஸ் மிகவும் விரக்தியடைந்து மோடியின் கல்லறையைத் தோண்ட விரும்புகிறது. நாங்கள் பிரிவு 370 இன் சுவரை இடித்தோம் வடகிழக்கில் குண்டுகள் மற்றும் வெடிமருந்துகளின் நிழலை முடிவுக்குக் கொண்டு வந்தோம், வளர்ச்சியின் பாதையை ஏற்றுக்கொண்டோம்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்கு அவர்களின் வீடுகளுக்குள் பதிலளித்தோம், ஆபரேஷன் சிந்தூர் நடத்தினோம் , மாவோயிஸ்ட் பயங்கரவாதத்திலிருந்து நாட்டை விடுவிக்க துணிச்சலான நடவடிக்கைகளை எடுத்தோம். எனவே, எதிர்க்கட்சிகள் எனக்கு கல்லறையைத் தோண்ட விரும்புகிறார்கள் என்றார்
எதிர்க்கட்சியினர் ஓடி விட முடியாது
எதிர்க்கட்சியினர் ஓடி விட முடியாது; பதில் சொல்லியே ஆக வேண்டும் என்ற பிரதமர் மோடி, கடந்த காலங்களில் காங்கிரஸ் செய்த தவறுகளை தாங்கள் செய்யவில்லை என்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தது மிகவும் ஏமாற்றம் அளிப்பதாகவும் தெரிவித்தார். மேலும், காங்கிரஸ் கட்சிக்கு எதிர்காலத்துக்கான இலக்குகளோ அல்லது அதற்கான நோக்கங்களோ இருந்தது இல்லை என்று தெரிவித்த மோடி, வர்த்தக ஒப்பந்தம் இளைஞர்களுக்கு பயனளிக்கும்;
இந்தியாவின் வர்த்தக ஒப்பந்தத்தை உலக நாடுகள் பாராட்டுவதாகவும் உலகின் 3ஆவது பெரிய பொருளாதரமாக மாறுவதற்கான பாதையில் இந்தியா பயணித்து வருவதாகவும் எதிர்காலத்தை கருத்தில் கொண்டே வர்த்தக ஒப்பந்தங்களில் புரட்சி செய்து வருவதாகவும் அரசின் முதிர்ச்சியான முடிவுகளால் சீர்திருத்தங்கள் சாத்தியமானதாகவும் பிரதமர் பேசினார்.
