சர்ச்சையில் சிக்கிய பிகார் முதலமைச்சர் நிதிஷ் குமார்:


பிகார் சட்டப்பேரவையில் நேற்று பேசிய அம்மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், “பிகாரில் பெண் கல்வி உயர்ந்துள்ளது. இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதிலும் உதவிகரமாக உள்ளது. ஒரு படித்த பெண் திருமணம் செய்துகொள்ளும்போது, கருவுறுதலை தடுப்பதற்கான வழிமுறகளை கணவருக்கு கற்று கொடுக்க முடியும். இது மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்த உதவுகிறது” என கூறினார். 


அதுமட்டும் இன்றி, கணவன் - மனைவி இடையேயான சில அந்தரங்க விவகாரங்களை பற்றி பேசினார். அந்தரங்க விவகாரங்கள் தொடர்பாக பிகார் சட்டப்பேரவையிலேயே, சைகைகளுடன் முதலமைச்சர் பேசியதற்கு அவையில் இருந்த பெண் உறுப்பினர்கள் அப்போதே ஆட்சேபனை தெரிவித்தனர். இந்த விவகாரம் தேசிய அளவில் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில், தான் தெரிவித்த கருத்துக்கு நிதிஷ் குமார், பகிரங்க மன்னிப்பு கோரினார்.


வெளுத்து வாங்கிய பிரதமர் மோடி:


இந்த நிலையில், மத்திய பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட பிரதமர் மோடி, இந்த விவகாரத்தை கையில் எடுத்து, INDIA கூட்டணியை கடுமையாக சாடினார்.


"INDIA கூட்டணியின் (28 எதிர்க்கட்சிகளை உள்ளடக்கிய மெகா கூட்டணி) ஒரு முக்கியத் தலைவர், அநாகரீகமான வார்த்தைகளை வெட்கமின்றி சட்டமன்றத்தில் பயன்படுத்தினார். INDIA கூட்டணியை சேர்ந்த ஒரு தலைவர் கூட அவருக்கு எதிராக பேசவில்லை. எவ்வளவு கீழ்த்தரமாக பேசி நாட்டுக்கு அவமானத்தை ஏற்படுத்துகிறார்கள்.


அது, திமிர்பிடித்த கூட்டணி. டிவி பார்ப்பவர்கள் நேற்று பார்த்திருப்பார்கள். தாய்மார்கள், சகோதரிகள் இருந்த சட்டசபையில் வெட்கமே இல்லாமல் வெட்கக்கேடான வார்த்தையை INDIA கூட்டணியின் பெரிய தலைவர் பயன்படுத்தினார். அத்தகையவர்கள் உங்களுக்காக வேலை செய்வார்களா? அவர்களை மதிக்க வேண்டுமா?" என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


"சோனியா காந்தி குறித்து பேசியதற்காக பிரதமர் மன்னிப்பு கேட்டாரா?"


இதற்கு பதிலடி தந்த ராஷ்டிரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் சிவானந்த் திவாரி, "மூத்த காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை ஜெர்சி மாடு என்று அழைத்ததற்காக பிரதமர் மன்னிப்பு கேட்டாரா என்பதை அறிய விரும்புகிறேன். சோனியா காந்தி மற்றும் சசி தரூரின் காதலிக்கு எதிராக பயன்படுத்தப்பட்ட மோசமான வார்த்தைகளுக்கு பிரதமர் (எப்போதாவது) மன்னிப்பு கேட்டாரா?


நிதிஷ் குமார் தனது கருத்துக்காக உள்ளேயும் வெளியேயும் மன்னிப்பு கேட்டுவிட்டார். அது தவறு என்று ஒப்புக்கொண்டார். நிதிஷ் குமார் உணர்ந்தவுடன் மன்னிப்பு கேட்டார். ஆனால், பிரதமர் நிதிஷ்குமாரை விமர்சிக்கிறார். அவர், எந்தளவுக்கு பெண்களுக்கு மரியாதை கொடுக்கிறார்?  இந்திரா காந்தியின் மருமகள் என்பதையும் ராஜீவ் காந்தியின் மனைவி என்பதை அவர்கள் மறந்துவிட்டார்களா?" என்றார்.