இந்தியாவில் கடைசியாக உருவான மாநிலம் தெலங்கானா. பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு உருவான தெலங்கானாவின் முதல் சட்டப்பேரவை தேர்தல் கடந்த 2014ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அப்போதிலிருந்து 9 ஆண்டுகளாக பாரத் ராஷ்டிர சமிதி கட்சி ஆட்சியில் உள்ளது.


தெலங்கானாவை குறிவைக்கும் பாஜக:


தென் மாநிலங்களில் கர்நாடகாவை தவிர வேறு எங்கும் ஆட்சி அமைக்காத பாஜக, தன்னுடைய அடுத்த குறியை தெலங்கானா மீது வைத்துள்ளது. இந்தாண்டின் இறுதியில், அங்கு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லாத நிலையில், அங்கு தேர்தல் களம் சூடி பிடித்துள்ளது. 


கே. சந்திரசேகர் ராவ் தலைமையிலான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர பாஜக தீவிரவாக வேலை பார்த்து வருகிறது. அந்த வகையில், பல்வேறு வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி இன்று தெலங்கானா சென்றுள்ளார். வாரங்கலில் 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி பேசிய மோடி, இந்திய வரலாற்றில் தெலங்கானா மக்கள் சிறப்பாக பங்களித்ததாக புகழாரம் சூட்டினார்.


வளர்ச்சி பணி திட்டங்களை தொடங்கி வைத்த பிரதமர் மோடி:


பொதுக்கூட்டம் ஒன்றில் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "தெலங்கானா மாநிலம் புதியதாக இருக்கலாம். ஆனால், இந்திய வரலாற்றில் தெலங்கானா மற்றும் அதன் மக்களின் பங்களிப்பு எப்போதும் சிறப்பாக உள்ளது. இன்று இந்தியா உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக மாறியிருக்கிறது. அதில் தெலங்கானா மக்களின் பங்கு அளப்பரியது.


இப்படிப்பட்ட சூழ்நிலையில், உலகமே இந்தியாவில் முதலீடு செய்ய முன்வரும்போது. எழுச்சி பெறும் இந்தியா பற்றி உற்சாகம் நிலவி வருகிறது. தெலங்கானா மக்களுக்கு எல்லையற்ற வாய்ப்புகள் உள்ளன. புதிய பாரதத்தை 'இளமையான இந்தியா' பிரதிநிதித்துவப்படுத்துகிறது. 


இந்த பாரதம் ஆற்றல் நிறைந்தது. இந்த பொற்காலத்தின் ஒவ்வொரு நொடியையும் நாம் பயன்படுத்த வேண்டும். இந்தியாவின் எந்தப் பகுதியும் விரைவான வளர்ச்சியில் பின்தங்கிவிடக் கூடாது" என்றார்.


தெலங்கானாவை தொடர்ந்து, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவதற்காக ராஜஸ்தான் மாநிலம் பிகானேர் நகருக்கு மோடி செல்ல உள்ளதாக பிரதமர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது. அமிர்தசரஸ் - ஜாம்நகர் பொருளாதார வழித்தடத்தின் ஆறு வழி விரைவுச் சாலைப் பகுதியையும், பசுமை ஆற்றல் வழித்தடத்திற்கான மாநிலங்களுக்கு இடையேயான டிரான்ஸ்மிஷன் லைனின் முதல் கட்டத்தையும் பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்.


சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் உள்ளிட்ட 4 மாநிலங்களுக்கும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இதில், உத்தர பிரதேசத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களுக்கு இந்தாண்டின் இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.