Just In





'ஒற்றுமையை வலுப்படுத்தும் காசி தமிழ் சங்கமம்' பிரதமர் மோடி பேச்சு!
அகத்திய முனிவர், பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்புகள் காசி தமிழ் சங்கமம் நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன் என மோடி பேசியுள்ளார்.

உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சியின் மூன்றாவது பதிப்பு இன்று தொடங்கப்பட உள்ளது. இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில், "மகா கும்பமேளா நடைபெறும் இந்த வேளையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதால் இது கூடுதல் சிறப்பு பெறுகிறது.
பிரதமர் மோடி என்ன பேசினார்?
தமிழ்நாட்டிற்கும் காசிக்கும், காவேரிக்கும் கங்கைக்கும் இடையிலான நீடித்த இணைப்பு பல ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. முந்தைய இரண்டு பதிப்புகளின் போது ஏற்பட்ட மக்களின் இணக்கமான உணர்வுகளும், அனுபவங்களும் இந்தியாவின் பன்முக கலாச்சாரத்தின் அழகையும், இரு பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு இடையேயான வலிமையான இணைப்புகளையும் காட்சிப்படுத்தின.
காசி தமிழ் சங்கமம் இதுபோன்ற நினைவுகளை புதுப்பிப்பது மட்டுமல்லாமல், தமிழ்நாட்டிற்கும் காசிக்கும் இடையேயான தொடர்பை மேலும் வலுப்படுத்தும். முழு மனதுடன் மக்கள் பங்கேற்பதால், இந்த சங்கமம் நிகழ்ச்சிகள் ‘ஒரே பாரதம், உன்னத பாரதம்’ உணர்வை வழிநடத்துகின்றன.
"மறக்க முடியாத சிறந்த நினைவுகள்"
அகத்திய முனிவர், பாரம்பரிய மருத்துவ முறைக்கும், செம்மொழி தமிழ் இலக்கியத்திற்கும் அளித்த பங்களிப்புகள் இந்த ஆண்டு நிகழ்வில் கொண்டாடப்பட இருப்பதை அறிந்து புளகாங்கிதம் அடைகிறேன். மேலும் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்கள், மகா கும்பமேளாவில் பங்கேற்பதுடன் அயோத்தியின் ஸ்ரீ ராமர் ஆலயத்திற்கும் செல்வார்கள் என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.
இது போன்ற ஆன்மீக தலங்களுக்கு பயணிப்பதன் வாயிலாக பங்கேற்பாளர்கள் அனைவரும் ஆசி பெற்றதாக உணர்வார்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை. வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்கும் தொலைநோக்குப் பார்வையுடன் நாடு முன்னேறி வரும் நிலையில், நமது பன்முகத்தன்மையைக் கொண்டாடுவதுடன் நமது ஒற்றுமையை வலுப்படுத்துவதில் காசி தமிழ் சங்கமம் போன்ற முயற்சிகள் முன்னோடியாகத் திகழும்.
தமிழ்நாட்டிலிருந்து காசிக்குப் பயணிக்கும் மக்கள், வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத சிறந்த நினைவுகளை தங்களுடன் எடுத்துச் செல்ல வேண்டுமென விழைகிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.