இந்தாண்டின் இறுதியில் குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பல்வேறு வளர்ச்சி திட்டங்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பரூச் மாவட்டத்தில் நாட்டின் முதல் மொத்த மருந்து பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.


பின்னர் பேசிய அவர், குஜராத்திற்குள் மாற்று வேடத்தில் நுழைய அர்பன் நக்சல்கள் முயன்று வருவதாக ஆம் ஆத்மி கட்சியை மோடி மறைமுகமாக விமர்சித்தார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "அர்பன் நக்சல்கள் புதிய தோற்றத்துடன் மாநிலத்திற்குள் நுழைய முயற்சிக்கிறார்கள். அவர்கள் தங்கள் உடைகளை மாற்றிக்கொண்டனர். அவர்கள் எங்கள் அப்பாவி மற்றும் ஆற்றல் மிக்க இளைஞர்களை தவறாக வழிநடத்துகிறார்கள்


அர்பன் நக்சல்கள் மேலிருந்து கால் பதிக்கிறார்கள். அவர்கள் நம் இளம் தலைமுறையை அழிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம். நாட்டை அழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள அர்பன் நக்சல்களுக்கு எதிராக நமது குழந்தைகளை எச்சரிக்க வேண்டும். அவர்கள் அந்நிய சக்திகளின் முகவர்கள். அவர்களுக்கு எதிராக குஜராத் தலை குனியாது, குஜராத் அவர்களை அழித்துவிடும்.


2014ஆம் ஆண்டு, நான் பிரதமராக பதவியேற்றபோது, ​​உலக அளவில் 10ஆவது இடத்தில் இருந்த இந்தியப் பொருளாதாரம் தற்போது ஐந்தாவது இடத்திற்கு வந்துள்ளது" என்றார்.


சமீபத்தில், குஜராத்தின் நர்மதா மாவட்டத்தில் உள்ள ஏக்தா நகரில் சுற்றுச்சூழல் அமைச்சர்களின் தேசிய மாநாட்டை காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்த பின்னர், பல்வேறு மாநிலங்களின் சுற்றுச்சூழல் அமைச்சர்களுடன் மோடி உரையாடினார்.


அப்போது அவர், "அர்பன் நக்சல்கள் மற்றும் அரசியல் ஆதரவுடன் இருக்கும் வளர்ச்சிக்கு எதிரான சக்திகள், சர்தார் சரோவர் அணை கட்டும் திட்டத்தை முடக்கி, சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று பிரச்சாரம் செய்தனர். 


இந்த காலதாமதத்தால் பெரும் பணம் விரயமானது. இப்போது, ​​அணை கட்டி முடிக்கப்பட்டதும், அவர்களின் கூற்றுக்கள் எவ்வளவு சந்தேகத்திற்குரியவை என்பதை நீங்கள் நன்றாக தீர்மானிக்க முடியும்" என்றார்.


குஜராத்தில் ஆட்சியை பிடித்து விட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆம் ஆத்மி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் தேர்தல் பிரசாரத்தின் ஒரு பகுதியாக, செப்டம்பர் 13ஆம் தேதி அன்று, ஆட்டோ டிரைவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்றார். அக்கூட்டத்தில்தான், தன் வீட்டிற்கு வந்து சாப்பிடுமாறு ஆட்டோ டிரைவர் விக்ரம் என்பவர் கெஜ்ரிவாலை கேட்டு கொண்டார். 


அவரின் கோரிக்கையை ஏற்ற, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரும் டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால், அகமதாபாத்தில் உள்ள ஆட்டோ டிரைவரின் வீட்டிற்கு சென்று உணவு அருந்தினார். சமூக வலைதளங்கள், செய்தித்தாள்கள் என அனைத்திலும் இது செய்தியாக வெளியாகி இருந்தது.