முக்கியான நீதிமன்ற தீர்ப்புகளை மாநில மொழிகளில் மொழி பெயர்க்க தொடர் முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு குடியரசு தினம் மற்றும் உச்ச நீதிமன்ற தொடக்க தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக அதன் 9,423 தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் உச்ச நீதிமன்றம் பதிவேற்றியது.
"இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்ற முழுமனதுடன் முயற்சி"
இந்த நிலையில், இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்ற முழுமனதுடன் மத்திய அரசு முயற்சி செய்து வருதவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் சர்வதேச வழக்கறிஞர்கள் மாநாட்டை இன்று தொடங்கி வைத்து பேசிய அவர், "சட்டங்களை எழுத, நீதித்துறை செயல்பாட்டில் பயன்படுத்தப்படும் மொழி நீதியை உறுதி செய்வதில் பெரும் பங்கு வகிக்கிறது" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இந்திய அரசாங்கத்தில் உள்ள நாங்கள் இரண்டு வழிகளில் சட்ட இயற்ற வேண்டும் என்று நினைக்கிறோம். ஒரு வரைவு நீங்கள் பழகிய மொழியில் இருக்க வேண்டும். இரண்டாவது வரைவு நாட்டின் சாமானியர் புரிந்துகொள்ளும் மொழியில் இருக்கும். சட்டத்தை தனது சொந்தமாக அவர் கருத வேண்டும். ஒரு காலத்தில் சிக்கலான முறையில் சட்டங்களை உருவாக்கும் நடைமுறை இருந்தது" என்றார்.
நீதித்துறைக்கு பிரதமர் மோடி பாராட்டு:
நீதித்துறைக்கு பாராட்டு தெரிவித்த பிரதமர் மோடி, "நீதித்துறை மற்றும் வழக்கறிஞர்கள் நீண்ட காலமாக இந்தியாவின் நீதி அமைப்பின் பாதுகாவலர்களாக இருந்து வருகின்றனர். மேலும், அவை இந்தியாவின் சுதந்திரத்தில் முக்கிய பங்கு வகித்தன. மகாத்மா காந்தி, பி.ஆர். அம்பேத்கர், ஜவஹர்லால் நேரு, சர்தார் வல்லபாய் படேல் போன்றோர் வழக்கறிஞர்கள் ஆவர். இந்தியா பல வரலாற்றுத் தருணங்களைக் கண்டிருக்கும் நேரத்தில் இந்த மாநாடு நடக்கிறது" என்றார்.
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து பேசிய அவர், "இது பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு புதிய திசையையும் ஆற்றலையும் கொடுக்கும். 2047 ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக மாற வேண்டும் என்ற இலக்கை அடைய இந்தியா கடுமையாக உழைத்து வரும் நிலையில், அதற்கு வலுவான மற்றும் பாரபட்சமற்ற நீதி அமைப்பு தேவை. இந்தியா மீது உலக நாடுகள் நம்பிக்கை வைப்பதில் பாரபட்சமற்ற நீதிக்கு பெரும் பங்கு உண்டு" என்றார்.
இந்தி திணிப்பு என எதிர்க்கட்சிகள் விமர்சனம்:
இந்திய மொழிகளில் சட்டங்களை இயற்றுவது குறித்து பிரதமர் மோடி பேசினாலும் இந்தி மொழிக்கு மட்டுமே மத்திய பாஜக அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன.
சமீபத்தில், இந்திய தண்டனை சட்டத்தின் பெயரை பாரதிய நியாய சங்ஹீத என மத்திய அரசு மாற்றியுள்ளது. அதேபோன்று, குற்றவியல் நடைமுறை சட்டத்தின் பெயரை பாரதிய நாகரிக் சுரக் ஷ சங்ஹீத என்றும் இந்திய ஆதார சட்டத்தின் பெயரை பாரதிய சக் ஷயா என்றும் பெயர் மாற்றப்பட்டுள்ளது. இந்தியில் பெயர் வைத்ததற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்திருந்தார்.