ஜி-20 அமைப்புக்கு இந்தியா, தலைமை வகித்து வரும் நிலையில், பெண்கள் முன்னேற்றத்திற்கான அமைச்சர்கள் மாநாடு இன்று குஜராத் மாநிலம் காந்திநகரில் நடைபெற்றது. இதில், காணொளி காட்சி வாயிலாக கலந்து கொண்ட பிரதமர் மோடி, "பெண்களின் பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சிக்கு வழிவகுக்கும்" என்றார்.


"பெண்களின் பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது"


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "பெண்களுக்கு அதிகாரமளிப்பதில் இந்தியா முன்னேறி வருகிறது. பெண்களால் உலகம் செழிக்கும். தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகளில் 46% பெண்களாக உள்ளனர். இந்தியாவில் 80%க்கும் அதிகமான செவிலியர்கள், மருத்துவச்சிகள் பெண்களே ஆவர்.


பெண்களின் பொருளாதார முன்னேற்றம் வளர்ச்சியைத் தூண்டுகிறது. அவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உலகளாவிய முன்னேற்றத்திற்கு ஊந்துசக்தியாக உள்ளது. அவர்களின் தலைமை அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்கப்படுத்துகிறது.
அவர்களின் குரல் ஒரு நேர்மறையான மாற்றத்தை ஊக்குவிக்கிறது.


பெண்களை மேம்படுத்துவதற்கான மிகச் சிறந்த வழி பெண்கள் தலைமையில் வளர்ச்சியை அணுகுவதே ஆகும். பெண் சாதனையாளர்களை வழக்கமாக்கிக் கொள்ளும் ஒரு சமதளத்தை உருவாக்குவதே எங்கள் இலக்காக இருக்க வேண்டும். பெண்களை கட்டுப்படுத்தும் சந்தைகள், உலகளாவிய சங்கிலி, நிதி பிரச்னை ஆகியவற்றை அகற்ற நாம் பணியாற்ற வேண்டும்" என்றார்.


"எழுச்சியூட்டும் முன்மாதிரியாக திகழும் குடியரசு தலைவர்"


குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு புகழாரம் சூட்டிய பிரதமர் மோடி, "நமது குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒரு எழுச்சியூட்டும் முன்மாதிரியாக திகழ்கிறார். அவர் எளிமையான பழங்குடி பின்னணியில் இருந்து வந்தவர். ஆனால், இப்போது உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தை வழிநடத்துகிறார். உலகின் இரண்டாவது பெரிய பாதுகாப்புப் படையின் தலைமைத் தளபதியாக உள்ளார்" என்றார்.


பெண்கள் தலைமை தாங்குவதன் முக்கியத்துவம் குறித்து பேசிய பிரதமர், "பெண்கள் தலைமையிலான வளர்ச்சியே அரசாங்கத்தின் முக்கிய முன்னுரிமையாக இருக்கிறது. பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் 70 சதவீத கடன்கள் பெண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன. இவை மைக்ரோ லெவல் யூனிட்களை ஆதரிக்க ரூ. 1 மில்லியன் வரையிலான கடன்களாகும். அதேபோல், ஸ்டாண்ட் அப் இந்தியா (அரசு திட்டம்) கீழ் 80 சதவீத பயனாளிகள் பெண்கள்.


இந்தியாவில் உள்ள விண்வெளி விஞ்ஞானிகளில் நான்கில் ஒரு பங்கு பெண்கள். அவர்களின் திறமை மற்றும் கடின உழைப்பு சந்திரயான், ககன்யான் மற்றும் மிஷன் மார்ஸ் போன்ற விண்வெளி திட்டங்களின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியுள்ளது.


இன்று இந்தியாவில் ஆண்களை விட பெண்களே அதிக எண்ணிக்கையில் உயர்கல்வியில் சேருகின்றனர். சிவில் ஏவியேஷன் (விமான போக்குவரத்து) துறையில் அதிக எண்ணிக்கையிலான பெண் விமானிகள் கொண்ட நாடு இந்தியா. மேலும், இந்திய விமானப்படையில் பெண் விமானிகள் தற்போது போர் விமானங்களை இயக்கி வருகின்றனர்" என்றார்.