Modi Ka Parivar: இந்திய மக்கள் பாசத்தின் அடையாளமாக தங்களது சமூக ஊடகங்களில் வைத்துள்ள மோடியின் குடும்பம் என்ற பெயரை நீக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தேர்தல் பிரச்சாரத்தின் மூலம், இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தங்கள் சமூக ஊடகங்களில் என் மீதான பாசத்தின் அடையாளமாக 'மோடி கா பரிவார்'(மோடியின் குடும்பம்) என பதிவிடுகின்றனர். எனக்கு அதன் மூலம் உத்வேகம் கிடைத்துள்ளது.
தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு இந்திய மக்கள் தொடர்ந்து மூன்றாவது முறையாக பெரும்பான்மையை வழங்கியுள்ளனர். இது ஒரு வகையான சாதனை. மேலும் நமது தேசத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து பணியாற்றுவதற்கான ஆணையை எங்களுக்கு வழங்கியுள்ளனர்.
நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்ற செய்தி திறம்பட தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்திய மக்களுக்கு மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் உங்கள் சமூக ஊடகங்களில் இருந்து 'மோடி கா பரிவார்' என்பதை நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சமூக ஊடக கணக்கின் பெயர் மாறலாம்.
ஆனால், இந்தியாவின் முன்னேற்றத்திற்காக ஒரே குடும்பமாக போராடும் நம்முடைய பந்தம் வலுவாக இருக்கும். யாராலும் உடைக்கப்படாது" என பதிவிட்டுள்ளார்.
மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின்போது, மோடி குறித்து பீகார் மாநில முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் தெரிவித்த கருத்து சர்ச்சையானது. "நரேந்திர மோடிக்கு சொந்தமாக குடும்பம் இல்லையென்றால் நாம் என்ன செய்ய முடியும்?
ராமர் கோவிலை பற்றி பெருமையாக கூறி வருகிறார். அவர் உண்மையான இந்துவும் இல்லை. இந்து பாரம்பரியத்தில், ஒரு மகன் தனது பெற்றோரின் மறைவுக்குப் பிறகு தலை மற்றும் தாடியை மொட்டையடிக்க வேண்டும். அம்மா இறந்தபோது மோடி அவ்வாறு செய்யவில்லை" என்றார்.
இதற்கு பதிலடி அளித்த மோடி, "அவர்களின் குடும்ப அரசியலை நான் கேள்விக்குட்படுத்துகிறேன். மோடிக்கு குடும்பம் இல்லை என சொல்கிறார்கள். என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். என் நாட்டுக்காக நான் வாழ்வேன்" என கூறியிருந்தார்.
இதையடுத்து, மோடிக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக பாஜக மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பாஜக ஆளும் மாநிலங்களின் முதலமைச்சர்கள் என அனைவரும் சமூக ஊடக கணக்கில் உள்ள தங்களின் பெயர்களோடு "மோடியின் குடும்பம்" என சேர்த்தனர்.