மத்திய அரசின் நடவடிக்கைகளால் ஏழைகள் இன்று லட்சாதிபதிகள் ஆக மாறியுள்ளனர். மத்திய அரசின் உதவியுடன் அவர்கள் சொந்தமாக வீடுகளைக் கட்டி லட்சாதிபதி ஆகியுள்ளனர் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.


நாடாளுமன்றத்தின் மக்களவையில் குடியரசுத் தலைவரின் உரை மீது நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றி வருகிறார்.


அதில் பிரதமர் பேசியதாவது:


பிரதம மந்திரியின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் ஏழைகள் நல்ல நிலையை எய்தியுள்ளனர்.


ஏழை மக்களின் வீடுகளுக்கு எல்பிஜி சிலிண்டர்களைக் கொண்டு சேர்த்துள்ளோம். முன்பு எல்பிஜி சமூக அந்தஸ்தின் அடையாளமாக இருந்தது. அதை நாங்கள் மாற்றியுள்ளோம். எதிர்க்கட்சிகள் கள நிலவரத்தைக் கவனித்திருந்தால் இது வெளிப்படையாகத் தெரிந்திருக்கும். ஆனால் நிறைய பேர் நிகழ்காலத்தில் இல்லாமல் 2014லேயே முடங்கியுள்ளனர். இன்று அவையில் நீண்ட உரையை ஆற்றுபவர்கள் இந்த தேசத்தை 50 ஆண்டு காலம் ஆண்டவர்கள் என்பதை மறக்கக் கூடாது.


இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் உலகில் ஒரு புதிய நிலைமை உருவானது. அதுபோலவே கொரோனாவுக்குப் பின்னர் உலகில் ஒரு புதிய நிலவரம் உண்டாகியுள்ளது. இது ஒரு திருப்புமுனை. இந்தியா இந்த வாய்ப்பை நழுவவிடக்கூடாது. இந்தியா விரைவில் உலகத் தலைமை பொறுப்புக்கு வரும். சுதந்திரம் அடைந்து 100 ஆண்டுகளை நோக்கி நாம் சென்று கொண்டிருக்கும் வேளையில் புதிய திறமைகளை நாம் பெற வேண்டும்.


தமிழகத்தில் பாஜகவால் ஆட்சிக்கு வரமுடியாது என காங்கிரஸ் கூறுகிறது. ஆனால், தமிழகத்தில் 1962க்குப் பின் காங்கிரஸ் கட்சியால் ஆட்சி அமைக்கவே முடியவில்லையே.


தெலங்கானா மாநிலத்தை உருவாக்கினோம் என பெருமை பேசுகிறீர்கள். அங்கு உங்களால் (காங்கிரஸ்) ஆட்சியைப் பிடிக்க முடிந்ததா? நிறைய தேர்தல்களில் தோற்றுவிட்டீர்கள். எந்த மாநிலமும் காங்கிரஸ் ஆட்சியை விரும்பவில்லை. இன்னும் தோற்றுக் கொண்டே இருப்பீர்கள். சில நேரங்களில் எனக்கொரு விஷயம் தோன்றும். நீங்கள் இன்னும் 100 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர வேண்டாம் என முடிவு செய்துவிட்டீர்களோ எனத் தோன்றும்.


இவ்வாறு பிரதமர் கூறினார்.


முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன் மக்களவையில் ராகுல் காந்தி உரையாற்றியபோது, தமிழகத்தில் பாஜகவால் ஒருபோதும் ஆட்சியமைக்க முடியாது எனக் கூறியிருந்தார். அதற்குப் பதிலளிக்கும் வகையில் பிரதமர் இக்கருத்தினைக் கூறியுள்ளார்.


கொரோனாவை பரப்பிய காங்கிரஸ்:


கொரோனா முதல் அலையின்போது உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதலின்படி  நாங்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தினோம். ஆனால், காங்கிரஸ்காரர்கள் ரயில்வே ஸ்டேஷனில் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு டிக்கெட் கொடுத்து அவர்களை கூட்டமாக கூட்டமாக பயணிக்கச் செய்து கொரோனாவைப் பரப்பினார்கள்.


தனது உரையைத் துவக்கும் முன்னர் பாடகி லதா மங்கேஷ்கருக்கு பிரதமர் மோடி தனது அஞ்சலியை உரித்தாக்கினார். லதா மங்கேஷ்கர் தனது குரலால் அனைவரையும் கட்டிவைத்தார். தேசத்தை தனது குரலால் ஒன்றுபடுத்தினார் என்று புகழஞ்சலி செலுத்தினார்.