இந்தியாவின் 75ஆவது ஆண்டு நிறைவு விழாவின் ஒரு அங்கமாக காசி தமிழ்ச சங்கமம் நடத்தப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் நவம்பர் 17 முதல் டிசம்பர் 16 வரை மத்திய கல்வி அமைச்சகம் சார்பில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
காசி தமிழ்ச் சங்கமம்:
காசியில் நடைபெற்ற தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2,500 பேர் பங்கேற்றனர். அவர்களுக்கு சிறப்பான வரவேற்பு வசதிகள் செய்து தரப்பட்டன. அத்துடன், அலகாபாத் மற்றும் அயோத்தியா பகுதிகளையும் அவர்கள் சுற்றிப் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்நிலையில், காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் கடிதம் எழுதியுள்ளார். நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை பாராட்டி பேசிய மோடி, "வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வில் நீங்கள் பங்கேற்றது ஒரே பாரதம் என்ற முழுக்கத்திற்கு வலு சேர்த்துள்ளது.
நாட்டை ஒன்றிணைப்பதில் ஊக்கம் அளிக்கிறது:
காசி தமிழ்ச் சங்கமத்தின் மீது காட்டிய அன்பையும் அக்கறையையும் பாராட்டுகிறேன். காசி - தமிழ்நாட்டுக்கும் இடையேயான பிணைப்பை தமிழ்ச் சங்கமம் வெளிகாட்டியுள்ளது. நாட்டை ஒன்றிணைப்பதில் எனது முயற்சிகளை இரட்டிப்பாக்க இத்தகைய நடவடிக்கைகள் ஊக்குவிக்கிறது" என குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, காசி தமிழ்ச் சங்கமத்தை பாராட்டி, பிரதமர் மோடிக்கு பலர் கடிதம் எழுதி இருந்தனர். தமிழ், ஆங்கிலம், இந்தி மற்றும் சம்ஸ்கிருதம் உள்ளிட்ட பல மொழிகளில் இந்த கடிதங்கள் பிரதமருக்கு அனுப்பப்பட்டிருந்தன. இதில், பலர் சங்கமத்தின் காட்சிகளுடன் தம் வீடியோ பதிவுகளை எடுத்தும் பிரதமருக்கு அனுப்பியிருந்தனர்.
அவை அனைத்தையும் படித்து பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவற்றை தமக்கு அனுப்பிய அனைவருக்கும் பதில் கடிதங்களை பிரதமர் மோடி அனுப்பி வருகிறார். தமிழில் அச்சடிக்கப்பட்ட அந்த கடிதங்களில் பிரதமர் மோடி கையொப்பமிட்டு அனுப்பியுள்ளார். இந்த கடிதங்களை பெற்றவர்கள் அவற்றை சமூகவலைதளங்களிலும் பகிரத் தொடங்கி உள்ளனர்.
அந்த வகையில், பிரதமர் மோடி எழுதிய ஒரு கடிதத்தில், "காசி தமிழ்ச் சங்கமத்தில் நீங்கள் பங்கேற்றது குறித்து உண்மையிலேயே மிக்க மகிழ்ச்சி. வரலாற்று சிறப்புமிக்க காசியில் தமிழர்களின் வளமையானக் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியக் கொண்டாட்டத்தை காணும் இனிமையான அனுபவம், கங்கை, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடுவதைப் போன்றது.
‘ஒரே பாரதம் உன்னத பாரதம்’ என்பது ஒரு சொற்றொடர் மட்டுமல்ல. பன்முகத்தன்மையை கொண்டாடும் இந்தியா போன்ற நாட்டிற்கு தனித்துவமான ஒரு வாழ்க்கை முறையாகும். சங்க இலக்கியத்தின் தொன்மையானக் காலகட்டத்திலிருந்து நவீன கால காசி தமிழ்ச் சங்கமம் வரை, அத்தகைய உடைக்க முடியாத ஒற்றுமை இழைகளால் நாம் பிணைக்கப்பட்டுள்ளோம்" என குறிப்பிட்டிருந்தார்.