சாதி, மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை இன்று உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.


10 நாட்களுக்கு முன்பாகவே வீட்டைப் புதுப்பித்து, பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து நேற்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது. இதனிடையே, இன்றைய தினம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நள்ளிரவே வீடுகளில் வண்ண கோலமிட்டு மக்கள் பொங்கலை வரவேற்றனர். 


தொடர்ந்து அதிகாலையிலேயே எழுந்து நீராடி  புத்தாடை அணிந்து விவசாயத்திற்கு ஆதாரமாக விளங்கும் சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக மண்பானைகளில் பொங்கலிட்டு படைத்து மகிழ்ந்தனர். 


மக்கள் ஒருவருக்கொருவர் பொங்கல் வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மஞ்சள் குழை, பனங்கிழங்கு, கரும்பு வைத்து பொங்கல் பொங்கி வந்தததும் “பொங்கலோ பொங்கல்” என உற்சாக குரலிட்டு மக்கள் பொங்கலை கொண்டாடி வருகின்றனர்.


இந்நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள், பிரபலங்கள் உள்பட அனைத்து தரப்பினரும் பொங்கல் வாழ்த்தினை தெரிவித்து வருகின்றனர்.


பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "அனைவருக்கும், குறிப்பாக உலகத் தமிழ் மக்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துக்கள். இந்த பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும் அற்புதமான ஆரோக்கியத்தையும் தரட்டும்" என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ளார்.


இந்த பண்டிகை நம் சமூகத்தில் ஒற்றுமையின் பிணைப்பை மேலும் வலுப்படுத்த நான் பிரார்த்திக்கிறேன் என்றும் அவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


 






"பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள். இந்த அறுவடைத் திருநாள் உலகம் முழுவதும் பரந்து விரிந்திருக்கும் தமிழ் மக்கள் அனைவருக்கும் செழுமையையும் நிறைவையும் தருவதாக அமையட்டும்" என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வாழ்த்து தெரிவித்துள்ளார்.


பொங்கல் வாழ்த்து தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், "அனைத்து மக்களுக்கும் பொங்கல் திருநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். செழுமையும் செழிப்பும் நிறைந்த இத்திருவிழா நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் நல்  ஆரோக்கியத்தையும் தரட்டும்!" என குறிப்பிட்டுள்ளார்.