இன்னும் சில வாரங்களில் நாடாளுமன்ற மக்களவை தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் நிலையில், அரசியல் களம் சூடிபிடித்து வருகிறது. மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் வியூகம் அமைத்து வருகின்றன. அதே சமயம், தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்க பா.ஜ.க. பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது.


"புதிய ஜம்மு காஷ்மீர்"


தேர்தல் நெருங்கி வருவதால், பல்வேறு நலத்திட்டங்களை மத்திய அரசு அறிவித்து வருகிறது. குறிப்பாக, நாடு முழுவதும் பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதும், புது திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியும் வருகிறார்.


அந்த வகையில், இன்று பிரதமர் மோடி காஷ்மீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி, காஷ்மீர் சென்றிருக்கிறார். ஸ்ரீநகரில் உள்ள பக்ஷி மைதானத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார் பிரதமர் மோடி.


இக்கூட்டத்தில் பேசிய அவர், ”புதிய ஜம்மு காஷ்மீருக்கு வந்துள்ளேன். சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு 370-ஐ நீக்கப்பட்ட பிறகு ஜம்மு காஷ்மீருக்கு சுதந்திரம் கிடைத்துள்ளது.  பல தசாப்தங்களாக, அரசியல் ஆதாயங்களுக்காக, காங்கிரஸ் கட்சிகள் ஜம்மு காஷ்மீர் மக்களை  சிறப்பு அந்தஸ்து என்ற பெயரில் தவறாக வழிநடத்தி நாட்டையும் தவறாக வழிநடத்தினர்.  பல காலங்களாக இருந்த சிறப்பு அந்தஸ்து மக்களுக்கு பலன் பெற்றதா அல்லது சில அரசியல் கட்சிகள் மட்டுமே அதைப் பயன்படுத்திக் கொண்டனவா?” என்றார் பிரதமர் மோடி.


தொடர்ந்து பேசிய அவர், ”இன்று சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டுள்ளது. எனவே ஜம்மு காஷ்மீர் இளைஞர்களின் திறமை முழுமையாக மதிக்கப்படுகிறது. மேலும் அவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கின்றன. இன்று இங்கு அனைவருக்கும் சம உரிமைகளும் சம வாய்ப்புகளும் உள்ளன.


”காஷ்மீரின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கும்”


எதிர்காலத்தில் ஜம்மு காஷ்மீரின் வளர்ச்சியை உலகமே வியந்து பார்க்கும். இங்குள்ள ஏரிகளில் எங்கு பார்த்தாலும் தாமரைகள் மலரும். ஜம்மு காஷ்மீருக்கும் தாமரைக்கும் ஆழமான தொடர்பு உள்ளது. இப்போது எனது அடுத்த பணி 'வெட் இன் இந்தியா'. மக்கள் ஜம்மு காஷ்மீருக்கு வந்து தங்கள் திருமணங்களை நடத்த வேண்டும்.


ஜம்மு காஷ்மீரில் ஜி20 எப்படி ஏற்பாடு செய்யப்பட்டது என்பதை உலகம் பார்த்திருக்கிறது. ஒரு காலத்தில் ஜம்மு காஷ்மீருக்கு யார் சுற்றுலா செல்வார்கள் என்று கேட்பது வழக்கம். ஆனால், இன்று 2 கோடிக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இங்கு வந்துள்ளனர். 


சுற்றுலா தொடர்பான பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைக்க இன்று எனக்கு வாய்ப்பு  கிடைத்தது. ஜம்மு காஷ்மீர் என்பது ஒரு பகுதி மட்டுமல்ல. அது இந்தியாவின் நெற்றிக்கண். ஜம்மு காஷ்மீர் தான் நாட்டிற்கே முன்னுரிமை. உங்கள் இதயங்களை வெல்லவே காஷ்மீருக்கு வந்திருக்கிறேன்.  உங்களுக்கு அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன். இது மோடியின் வாக்குறுதி. சரியான நேரத்தில் அனைத்து திட்டங்களை நிறைவேற்றி உங்கள் மனதை வென்றெடுப்பேன்" என்றார் பிரதமர் மோடி.