இந்தியாவின் கிராமப்புற மக்களுக்கு அதிகாரம் அளிக்கும் வகையிலான திட்டமாக கூறப்படும் ஸ்வமித்வா சொத்து அட்டைகள் வழங்குதலை நாளை (2025, ஜனவரி 18) பிற்பகல் 12.30 மணிக்கு காணொலிக் காட்சி மூலம்  பிரதமர் நரேந்திர மோடி தலைமை வகிக்கின்றார்.

ஸ்வமித்வா திட்டம் எதற்கு? 

பல தசாப்தங்களாக, இந்தியாவில் கிராமப்புற நிலத்தின் கணக்கெடுப்பும்  தகராறுகளுக்கு தீர்வு காண்பதும் முழுமையடையாமல் இருந்தது. பல மாநிலங்கள் கிராமங்களில் மக்கள் வசிக்கும் பகுதிகளை  வரைபடமாக்கவோ அல்லது ஆவணப்படுத்தவோ தவறிவிட்டன. சட்ட ஆவணங்கள் இல்லாத நிலையானது இந்தப் பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர்களை முறையான பதிவுகள் இல்லாதவர்களாகச ஆக்கியுள்ளது. இது அவர்கள் தங்கள் வீடுகளை மேம்படுத்த நிறுவன கடன் பெற அணுகுவதையோ அல்லது கடன்கள் மற்றும் பிற நிதி உதவிகளுக்கான அடமான சொத்தாக தங்கள் சொத்துக்களை பயன்படுத்துவதையோ தடுக்கிறது. பொருளாதார அதிகாரமளித்தலுக்கு சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட சொத்து ஆவணங்களின் இன்றியமையாத முக்கியத்துவத்தை உணர்ந்து ஸ்வமித்வா திட்டம் உருவாக்கப்ப ட்டது.

Also Read: அனல் பறக்கும் டெல்லி தேர்தல்: ஆண்களுக்கும் இலவச பேருந்து: பாஜக-காங்கிரசுக்கு செக் வைத்த அரவிந்த் கெஜ்ரிவால்.!

ட்ரோன் தொழில்நுட்பம்:

அண்மைக்கால ட்ரோன் தொழில்நுட்பத்தின் மூலம் கிராமங்களில் கணக்கெடுப்பு செய்து வீடுகள் வைத்திருக்கும் குடும்பங்களுக்கு ‘உரிமைகளின் பதிவு’ வழங்குவதன் மூலம் கிராமப்புற இந்தியாவின் பொருளாதார முன்னேற்றத்தை மேம்படுத்தும் தொலைநோக்குடன் ஸ்வமித்வா திட்டம் தொடங்கப்பட்டது. நாடு முழுவதும் 3.17 லட்சம் கிராமங்களில்  ட்ரோன் மூலம்  நில ஆய்வுப் பணிகள் முடிக்கப்பட்டிருப்பது ஸ்வமித்வா திட்டத்தின் குறிப்பிடத்தக்க சாதனையாகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சொத்துகளை பணமாக்குவதற்கும், வங்கிக் கடன்கள் பெற்று அதன் மூலம் நிதிநிறுவனக் கடனை அடைப்பதற்கும், சொத்து தொடர்பான தகராறுகளைக் குறைப்பதற்கும், கிராமப்புறங்களில் சொத்துகள் மற்றும் சொத்து வரியை சிறந்த முறையில் மதிப்பீடு செய்வதற்கும் கிராம அளவில் விரிவான திட்டமிடலை செயல்படுத்துவதற்கும் இந்தத் திட்டம் உதவுகிறது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Also Read: TN Rain: தமிழ்நாட்டை துரத்தும் கனமழை: 9 மாவட்டங்களில் வெளுக்கப்போகும் கனமழை: வானிலை புது அப்டேட்.!

65 லட்சம் அட்டைகள்

ஸ்வமித்வா சொத்து அட்டைகளானது சத்தீஷ்கர், குஜராத், இமாச்சலப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மிசோராம், ஒடிசா, பஞ்சாப், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் ஆகிய 10 மாநிலங்கள், ஜம்மு காஷ்மீர், லடாக் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 50 ஆயிரம் கிராமங்களுக்கான 65 லட்சத்துக்கும் அதிகமான ஸ்வமித்வா சொத்து அட்டைகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட உள்ளன. ஸ்வமித்வா திட்டத்தின் கீழ், தயாரிக்கப்பட்டுள்ள சுமார் 2.25 கோடி சொத்து அட்டைகளில் ஒரே நாளில் 65 லட்சம் சொத்து அட்டைகள் வழங்கப்படுவது வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனையாகும்.

நாளைய நிகழ்வின் போது, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுடன்  பிரதமர் திரு நரேந்திர மோடி கலந்துரையாடுவதோடு, நாட்டு மக்களுக்கும் உரையாற்றுகிறார். இந்த நிகழ்ச்சியில் மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சர் ராஜீவ் ரஞ்சன் சிங் என்கிற லாலன் சிங், இணையமைச்சர் பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல்  பஞ்சாய்த்து ராஜ்  செயலாளர் விவேக் பரத்வாஜ் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.

மேலும் பல மத்திய அமைச்சர்கள், முதலமைச்சர்கள், சம்பந்தப்பட்ட துறையின் மாநில/ யூனியன் பிரதேச  அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், பஞ்சாயத்து பிரதிநிதிகள் இணைய வழியில் இந்த நிகழ்வில் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.