Satellite Toll System: செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டணம் எப்படி வசூலிக்கப்படும் என்ற விவரங்களை இந்த தொகுப்பில் அறியலாம்.

செயற்கைக்கோள் சுங்கக் கட்டணம்:

நாடு முழுவதும் சுங்கச்சாவடிகளில் ஏற்படும் கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தும் நோக்கில், ஃபாஸ்டேக் எனப்படும் ஆன்லைன் முறையில் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அதை மேலும் எளிதாக்கும் வகையில் அடுத்த இரண்டு வாரங்களில்,  செயற்கைக்கோள் அடிப்படையிலான சுங்கக் கட்டண வசூல் கொள்கை அமல்படுத்தப்படும் என்று மத்திய போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்துள்ளார். இதன் மூலம், சுங்கச்சாவடிகளில் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

20 கி.மீ., இலவச பயணம்:

குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் (GNSS) தொழில்நுட்பம் கொண்ட வாகனங்கள்,  தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் 20 கி.மீ வரை இலவசமாகப் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களிடையே குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் பயன்பாட்டினை ஊக்குவிக்கும் நோக்கிலேயே இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் தினமும் இரு திசையிலும் 20 கி.மீ வரை கட்டணமில்லா பயணத்தை அனுபவிக்க முடியும். தற்போதுள்ள சுங்க வசூல் செயல்முறைகளில் புரட்சியை ஏற்படுத்துவதே இந்தப் புதுமையான அமைப்பின் நோக்கமாகும்.

GNSS எப்படி செயல்படும்?

GNSS-அடிப்படையிலான மின்னணு சுங்க வசூல் (ETC) அமைப்பு நிகழ்நேர இருப்பிட கண்காணிப்பு (real-time location tracking) அடிப்படையில் செயல்படுகிறது. இந்த தொழில்நுட்ப வசதியை கொண்டுள்ள  வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் நிறுத்தக்கூட வேண்டியதில்லை. இது தற்போதைய நடைமுறையிலிருந்து ஒரு பெரிய முன்னேற்றமாகும். இந்தப் புதிய அமைப்பின் செயல்திறன் மற்றும் துல்லியத்தை சோதிக்க, தேசிய நெடுஞ்சாலைகளின் குறிப்பிட்ட சில பகுதிகளில் அரசாங்கம் முன்னோடித் திட்டங்களைத் தொடங்கியுள்ளது. பயணிகளுக்கு அதிக வசதியை வழங்குவதற்காக இந்த முயற்சி FASTag உடன் இணைந்து தொடங்கப்பட்டுள்ளது.

பணம் எப்படி கழிக்கப்படும்?

ஆன்-போர்டு யூனிட் (OBU) அல்லது கண்காணிப்பு சாதனம் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு நெடுஞ்சாலைகளில் பயணித்த உண்மையான தூரத்திற்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும். OBU உடன் இணைக்கப்பட்ட டிஜிட்டல் வாலட்டிலிருந்து சுங்கக் கட்டணங்கள் தானாகவே கழிக்கப்படும், இதனால் முழு கட்டண செயல்முறையும் தடையற்றதாகவும் திறமையாகவும் இருக்கும். அதாவது தற்போது சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் கோடை ஸ்கேன் செய்து உங்கள் வாலட்டிலிருந்து பணம் கழிக்கப்படும். ஆனால், புதிய முறையில் நீங்கள் வாகனத்தை நிறுத்தி ஸ்கேன் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. செயற்கைக்கோள் அடிப்படையிலேயே உங்கள் வாகனம் பயணித்த தூரத்திற்கான கட்டணம் வாலட்டிலிருந்து கழிக்கப்படும். இந்தப் புதிய முறை, இந்தியா முழுவதும் தற்போது சுங்கச்சாவடிகள் வசூலிக்கப்படும் முறையில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மே 1 முதல் அமலுக்கு வரும் இந்த திட்டம்,  நாடு முழுவதும் பயணிகளுக்கு பயணத்தை மிகவும் வசதியாக மாற்றும்.

சுங்கச்சாவடிகள்:

கடந்த 2023ம் ஆண்டு அக்டோபர் மாத அரசு தரவுகளின்படி, நாடு முழுவதும் மொத்தம் ஆயிரத்து 425 சுங்கச்சாவடிகள் உள்ளன. இவற்றின் எண்ணிக்கை கடந்த 5 ஆண்டுகளில் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 10 சதவிகிதம் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டின் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளில் மொத்தம் 70 சுங்கச் சாவடிகள் உள்ளன. அவற்றில் ஒரு சில காலாவதியான பிறகும் கட்டணம் வசூலித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். அந்த சுங்கச் சாவடிகளை அகற்றவும் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் தான், சுங்கக் கட்டணத்தை துல்லியமாக வசூலிக்க மத்திய அரசு செயற்கைக்கோள் அடிப்படையிலான வசூல் முறையை அறிமுகப்படுத்த உள்ளது.