கடந்த 5 ஆண்டுகளாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள பிரதமர் மோடி பட்டம் பெற்றது தொடர்பான வழக்கு, அடுத்தாண்டு மே மாதம் 3ம் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடி வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களில் தெளிவான பதில்கள் கிடைக்காமல் உள்ளது. அதில் ஒன்றுதான் அவரின் கல்வி தகுதி தொடர்பானது. கடந்த 1978ஆம் ஆண்டு, பிரதமர் மோடி இளங்கலையில் தேர்ச்சி பெற்றதாகக் கூறப்படுதிறது. ஆனால், அவர் பட்டம் பெறவே இல்லை என சர்ச்சை எழுந்தது. 


இதை தொடர்ந்து, 1978ம் ஆண்டு பி.ஏ. படித்த அனைத்து மாணவர்களின் தேர்வு முடிவுகளையும் அவர்களின் பெயர், எண் ஆகியவற்றையும் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஆர்வலர் நீரஜ் குமார் கோரி இருந்தார். ஆனால், கேட்கப்பட்ட தகவல் மூன்றாம் தரப்பினருடையது எனக் கூறி அதை அளிக்க டெல்லி பல்கலைக்கழகத்தின் மத்திய பொது தகவல் அதிகாரி மறுத்துவிட்டார். இதனை தொடர்ந்து, மத்திய தகவல் ஆணையத்தில் அவர் மேல்முறையீடு செய்தார்.


 






இதுகுறித்து மத்திய தகவல் ஆணையம், கடந்த 2016ஆம் ஆண்டு பிறப்பித்த உத்தரவில், "வழக்கை விசாரித்ததை தொடர்ந்து முன்னதாக வழங்கப்பட்ட தீர்ப்புகளை பரிசீலனை செய்யப்பட்டதில், முன்னாள் அல்லது இந்நாள் மாணவரின் கல்வி தொடர்பான விவரங்கள் அனைத்தும் பொதுவெளியின் கீழ் வருகிறது. எனவே, கேட்கப்பட்ட தகவல்களை வழங்கமாறு சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு உத்தரவிடப்படுகிறது" என தெரிவித்தது.


மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு எதிராக டெல்லி பல்கலைக்கழகம் 2017ஆம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. முதல் விசாரணையிலேயே, மத்திய தகவல் ஆணையத்தின் உத்தரவுக்கு டெல்லி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.


வழக்கு தாமதம் :


அதன்பிறகு வெவ்வேறு காரணங்களுக்காக வழக்கு மீண்டும் மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. வழக்கின் தீர்ப்பில் தாமதம் ஏற்படுவதற்கான காரணங்களில் ஒன்று கொரோனா பெருந்தொற்று. இந்த விஷயம் ஜனவரி 28, 2020 க்குப் பிறகு மார்ச் 30, 2022 வரை பட்டியலிடப்படவில்லை.


இந்த ஆண்டு, மார்ச் 30, நவம்பர் 15 ஆகிய தேதிகளில் மட்டுமே வழக்கு பட்டியலிடப்பட்டது. கடந்த மார்ச் 30 அன்று, நேரமின்மை காரணமாக இந்த வழக்கை விசாரிக்க முடியவில்லை. இந்த வாரம், நிர்ணயிக்கப்பட்ட தேதியில், டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் ஆஜராகாததால் வழக்கின் விசாரணை மே 3, 2023க்கு ஒத்திவைக்கப்பட்டது.


கடந்த 2017ஆம் ஆண்டு, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா - தற்போது சொலிசிட்டர் ஜெனரல் - டெல்லி பல்கலைக்கழகம் சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வாதிட்டார். 


அனைத்து மாணவர்களின் எண்கள், தந்தை பெயர்கள் மற்றும் மதிப்பெண்களுடன் அனைத்து மாணவர்களின் முடிவுகளின் விவரங்களையும் கோரும் வழக்கில் கேட்கப்பட்ட தகவல் வெளியிடப்படுவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட வேண்டும் என பல்கலைக்கழகம் வாதிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.