நாடாளுமன்றத்தில் இன்று நடந்த சிறப்பு விருந்தில் ராகி தோசை, கம்பு கீர் என்று சிறுதானிய உணவுகளை உண்டார் பிரதமர் மோடி. நாடாளுமன்றத்தில் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக சிறப்பு விருந்து நடைபெற்றது. இந்த விருந்தை மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் நடத்தினார். விருந்தில் கேழ்விரகு தோசை, கம்பு கீர், ராகி இட்லி உள்பட பல்வேறு சிறுதானிய உணவுகள் வழங்கப்பட்டன. 


இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:


“2023-ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக நாம் கொண்டாடத் தயாராகி வரும் நிலையில், நாடாளுமன்றத்தில் தரமான தினை வகை உணவுகள் பரிமாறப்பட்ட மதிய விருந்தில் கலந்து கொண்டேன். கட்சி வேறுபாடுகளைக் கடந்து பலரும் இதில் பங்கேற்றதைக் கண்டது சிறப்பாக இருந்தது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.






தினை ஆண்டு வரலாறு:


இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று, ஐக்கிய நாடுகள் பொதுச்சபை, எதிர்வரும் 2023 ஆம் ஆண்டினை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக அறிவித்துள்ளது.


இது தொடர்பாக ஐ.நா. பொதுசபையில் இந்தியா, வங்காளதேசம், நேபாளம், நைஜீரியா, ரஷியா மற்றும் செனகல் ஆகிய நாடுகள் கொண்டு வந்த தீர்மானத்தை 70-க்கும் மேற்பட்ட நாடுகளும் ஆதரித்தன.


இதன் மூலம் தினை வகையால் கிடைக்கும் ஆரோக்கிய பலன்கள், பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ப பயிரிடும் முறைகள் போன்றவை குறித்த விழிப்புணர்வு ஏற்படும்.


இந்த நடவடிக்கைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், ‘தினை வகைகளை பிரபலப்படுத்துவதில் இந்தியா முன்னிலையில் இருப்பது பெருமை. அதன் நுகர்வு ஊட்டச்சத்து, உணவு பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலனை மேலும் மேம்படுத்துகிறது. மேலும் வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் ஸ்டார்ட்-அப் சமூகத்தினருக்கு தினை தொடர்பான ஆய்வு மற்றும் புத்தாக்க சாத்தியங்களை உருவாக்கும்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.


ஐ.நா.வில் தினை ஆண்டு அறிவிப்பு தீர்மானத்தை ஆதரித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டிருந்த பிரதமர் மோடி, புகழ்பெற்ற பிரதிநிதிகளுக்கு ஒரு நொறுக்குத்தீனியாக சுவையான தினை முறுக்கு வழங்கப்பட்டதாகவும், இதை அனைவரும் முயற்சி செய்யுமாறும் கேட்டுக் கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.